இலவச வீடுகள் ஒதுக்கக்கோரி பாய், தலையணையுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்


இலவச வீடுகள் ஒதுக்கக்கோரி பாய், தலையணையுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்
x
தினத்தந்தி 12 May 2018 4:15 AM IST (Updated: 12 May 2018 12:30 AM IST)
t-max-icont-min-icon

இலவச வீடுகள் ஒதுக்கக்கோரி பாய், தலையணையுடன் வந்து கோவை கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

கோவை,

கோவை வெரைட்டிஹால் ரோடு சி.எம்.சி. காலனியில் 400 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கு வெள்ளலூர் அடுக்குமாடி அரசு குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டு இருந்தது. ஆனால் இங்கு வசிக்கும் 120 குடும்பங்களுக்கு மட்டுமே வெள்ளலூர் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வசதி வாரியம் இலவச வீடுகள் ஒதுக்கியதாக கூறப்படுகிறது.

மீதம் உள்ள குடும்பங்களுக்கும் அரசின் இலவச வீடுகள் ஒதுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் நேற்று ஆதித்தமிழர் பேரவை மாநிலத்துணை தலைவர் பன்னீர் செல்வம் தலைமையில் அந்த பகுதி பொதுமக்கள் பாய், தலையணை, குடங்கள், பாத்திரங்களுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கோரிக்கைகளை மனுவாக எழுதி கலெக்டர் அலுவலகத்தில் அளிக்கும்படி போலீசார் கூறினர். அதன்படி அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:-

சி.எம்.சி. காலனியில் வசிக்கும் 400 குடும்பங்களில் 120 குடும்பங்களுக்கு மட்டுமே அரசு குடியிருப்பில் இலவச வீடுகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. தற்போது வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் சி.எம்.சி. காலனியில் கட்டப்பட்டுள்ள வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாங்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் உள்ளோம்.எனவே விடுபட்ட குடும்பங்களுக்கும் உடனடியாக இலவச வீடுகள் ஒதுக்க வேண்டும்.

இது குறித்து நாங்கள் பல முறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. விரைவில் மழைக்காலம் தொடங்க உள்ளது. எனவே எங்களுக்கு இலவச வீடுகள் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

Next Story