தஞ்சையில் சாலையோரம் கார், மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல், வாகன ஓட்டிகள் அவதி


தஞ்சையில் சாலையோரம் கார், மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல், வாகன ஓட்டிகள் அவதி
x
தினத்தந்தி 11 May 2018 9:30 PM GMT (Updated: 11 May 2018 7:58 PM GMT)

தஞ்சையில் சாலையோரம் கார், மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

தஞ்சாவூர்,

உலக பாரம்பரிய சின்னமாக திகழும் பெரியகோவில், அரண்மனை, சரசுவதிமகால் நூலகம் ஆகியவை தஞ்சை மாநகரில் உள்ளதால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து செல்கின்றனர். தஞ்சை மாநகரில் உள்ள சாலைகளில் முக்கியமான சாலையாக புதுக்கோட்டை சாலை திகழ்கிறது.

பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு செல்லும் அரசு, தனியார் பஸ்கள் எல்லாம் புதுக்கோட்டை சாலை வழியாக தான் சென்று வருகின்றன. புதிய பஸ் நிலையத்தில் இருந்து பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும் இந்த சாலை வழியாக செல்கின்றன.

இதனால் வாகனங்கள் வருவதும், போவதும் என காலை முதல் மாலை வரை எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

மேரீஸ்கார்னர் முதல் ராமநாதன் ரவுண்டானா வரை உள்ள சாலையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி, தனியார் வங்கிகள், ஓட்டல்கள், மருத்துவமனைகள் அதிகமாக உள்ளன.

இந்த சாலை மிகவும் குறுகலாக காணப்பட்டதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன்காரணமாக சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன்படி ரூ.1 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு புதிதாக தார் சாலையும் போடப்பட்டுள்ளது.

சாலை விரிவாக்கத்திற்கு பின்னரும் ராமநாதன் பஸ் நிறுத்தம் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். அந்த பகுதியில் சாலையின் இருபுறமும் வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகளுக்கு கார்கள், மோட்டார் சைக்கிள்களில் வருபவர்கள் சாலையோரம் வாகனங்களை நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர்.

இதனால் 2 பஸ்கள் செல்லக்கூடிய வகையில் இருக்கும் சாலையானது ஒரு பஸ் கூட மிகுந்த சிரமத்துடன் செல்லும் வகையில் குறுகலாக காட்சி அளிக்கும்.

அந்த நேரத்தில் பஸ்களோ, லாரிகளோ வந்தால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. ஒரு பஸ் செல்லும் போது, எதிர்திசையில் இன்னொரு பஸ் வந்தால் செல்ல முடியாத நிலை தான் உள்ளது. இது தவிர ஆட்டோ, கார், மோட்டார் சைக்கிள்களும் அதிக அளவில் செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சில நேரங்களில் சிறு, சிறு, விபத்துகளும் ஏற்படுகின்றன.

கிராமப்புறங்களில் இருந்து குந்தவைநாச்சியார் மகளிர் கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படிக்கும் மாணவ, மாணவிகள் பஸ்களில் வந்தால் ராமநாதன் பஸ் நிறுத்தத்தில் இறங்கி தான் செல்ல வேண்டும்.

போக்குவரத்து நெரிசல் காரணமாக மாணவ, மாணவிகள் சாலையை கடப்பதற்கும் மிகவும் சிரமப்படுகிறார்கள். மருத்துவமனைகள் இருப்பதால் நோயாளிகளும் மிகவும் எச்சரிக்கையுடன் சென்று வருகின்றனர். சில நேரங்களில் எதிர், எதிரே 2 பஸ்கள் வந்து விட்டால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றன.

பின்னர் ஒவ்வொன்றாக கடந்து செல்வதற்குள் வாகனஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

ராமநாதன் ரவுண்டானா பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணி முடிவடைந்து நீதிமன்றங்கள் செயல்பட தொடங்கினால் இன்னும் அதிகமான வாகனங்கள் வந்து செல்லும் சாலையாக புதுக்கோட்டை சாலை மாறிவிடும். எனவே இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு சாலையோரம் இருபுறமும் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் நிறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். ஏதாவது ஒரு புறம் வாகனங்கள் நிறுத்தினால் ஓரளவுக்கு போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும். இல்லையென்றால் வாகனங்களை நிறுத்துவதற்கென மாற்று இடம் ஏற்பாடு செய்ய வேண்டும்.

தற்போது பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அடுத்தமாதம்(ஜூன்) பள்ளிகள் திறக்கப்படும்போது மாணவ, மாணவிகள் வேன், பஸ்கள், ஆட்டோக்களில் பள்ளிக்கூடத்திற்கு வந்து செல்வார்கள். மேலும் மொபட் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மூலம் தங்களது குழந்தைகளை பெற்றோர் அழைத்து கொண்டு செல்வார்கள். அப்படி செல்லும்போது இதைவிட அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதற்கு முன்பாகவே போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க மாநகராட்சி அதிகாரிகளும், நெடுஞ்சாலைத்துறையினரும், போக்குவரத்து பிரிவு போலீசாரும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Next Story