மின் தகன மேடையில் மூதாட்டி உடலை எரிக்க தாமதமானதால் உடலை நடுரோட்டில் வைத்து உறவினர்கள் சாலை மறியல்


மின் தகன மேடையில் மூதாட்டி உடலை எரிக்க தாமதமானதால் உடலை நடுரோட்டில் வைத்து உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 11 May 2018 10:45 PM GMT (Updated: 11 May 2018 8:12 PM GMT)

திருப்பத்தூரில் மின் தகன மேடையில் மூதாட்டி உடலை எரிக்க தாமதமானதால் உடலை நடுரோட்டில் வைத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி கமலம்மாள் (வயது 55). இவர், நேற்று முன்தினம் இறந்துவிட்டார். அவரது உடலை பெரியார் நகர் பகுதியில் உள்ள நகராட்சி மின் தகன மேடையில் எரிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக ரூ.3 ஆயிரம் நகராட்சிக்கு கட்டணம் செலுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து நேற்று பிற்பகல் 2 மணிக்கு கமலம்மாள் உடல் மின் தகன மேடைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பணியில் இருந்தவர்கள் உடலை எரிக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதுகுறித்து பணியில் இருந்தவர்களிடம் கேட்டபோது மின்சாரம் இல்லை என்றும், குறைந்த அழுத்த மின்சாரம் இருப்பதாகவும் கூறி காலம் கடத்தி வந்தனர். இரவு நேரமாகியும் உடலை எரிக்காததால் ஆத்திரம் அடைந்த உறிவினர்கள் கமலம்மாளின் உடலை கிருஷ்ணகிரி சாலைக்கு எடுத்து வந்து சாலையின் நடுவே வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்–இன்ஸ்பெக்டர் அமர்நாத் மற்றும் போலீசார் அங்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், தாசில்தார் மற்றும் நகராட்சி ஆணையாளர் வரும் வரை உடலை எடுக்க மாட்டோம் என கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து தாசில்தார் சத்தயமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) அசோக்குமார், துப்புரவு அலுவலர் விவேக் ஆகியோர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. பின்னர் கமலம்மாள் உடலை அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டில் எரிக்கப்பட்டது.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story