விளை நிலங்களில் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்வதை தடுக்க வேண்டும் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
விளை நிலங்களில் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்வதை தடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
தென்காசி,
விளை நிலங்களில் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்வதை தடுக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
குறை தீர்க்கும் கூட்டம்
தென்காசி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. உதவி கலெக்டர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறுகையில்,
குளங்களில் முறையான அனுமதி பெறாமல் மண் அள்ளி செல்கின்றனர். விவசாய பணிகளுக்காக மட்டுமே மண் அள்ளுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் மண் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. எனவே உடனடியாக இழப்பீடு தொகையை வழங்க வேண்டும். மேலும் நிவாரணம் வழங்குவதில் உள்ள முறைகேடுகளை கண்டறிய தனியாக குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.
யானைகள் அட்டகாசம்
தென்காசி அருகே உள்ள வடகரை பகுதியில் விளை நிலங்களில் காட்டு யானைகள் புகுந்து பயிர்களை அழித்து அட்டகாசம் செய்வது தொடர்கதையாக உள்ளது. இதுகுறித்து பல முறை புகார்கள் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே வனத்துறையினர் விளை நிலங்களில் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடையநல்லூர் வனச்சரகத்தில் 13 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். ஒரு பகுதியில் காட்டு யானைகளை விரட்டினால் அவை அடுத்த பகுதிக்கு சென்று விடுகின்றன. இருப்பினும் காட்டு யானைகள் விளை நிலங்களில் வராத அளவில் உரிய நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன என்றனர்.
கலந்து கொண்டவர்கள்
கூட்டத்தில், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் கல்யாண குமார், தாசில்தார் முருகன், கடையநல்லூர் வன சரகர் ஆரோக்கிய சாமி, தென்காசி வட்டார வேளாண் அலுவலர் ஷேக் முகைதீன், வருவாய் ஆய்வாளர் கருணாகரன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ஜாகிர் உசேன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வேலுமயில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story