கோடை காலத்தில் நெல்லை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது மாநகராட்சி ஆணையாளர் நாராயண நாயர் தகவல்
நெல்லை மாநகரில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று மாநகராட்சி ஆணையாளர் நாராயண நாயர் கூறினார்.
நெல்லை,
நெல்லை மாநகரில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று மாநகராட்சி ஆணையாளர் நாராயண நாயர் கூறினார்.
சிறப்பு முகாம்
நெல்லை மாநகராட்சி சார்பில் தச்சநல்லூர் மண்டல அலுவலகத்தில் நேற்று சிறப்பு முகாம் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் நாராயண நாயர் தலைமை தாங்கினார். மாநகர நல அலுவலர் பொற்செல்வன், செய்தி, விளம்பரத்துறை துணை இயக்குனர் கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தச்சநல்லூர் மண்டலத்துக்கு உட்பட்ட பொதுமக்களிடம் இருந்து சொத்து வரி பெயர் மாற்றம், காலி மனை வரி விதிப்பு, புதிய சொத்து வரி விதிப்பு, குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம், புதிய குடிநீர் இணைப்புகள், கட்டிட அனுமதி, பிறப்பு–இறப்பு சான்றிதழ் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 243 மனுக்களுக்கு உடனடியாக ஆணைகள் வழங்கப்பட்டன.
மேலும் ஓய்வுபெற்ற துப்புரவு பணியாளர்கள் 2 பேருக்கு ரூ.6 லட்சத்து 38 ஆயிரத்து 418 விடுப்பூதிய பணம் வழங்கப்பட்டது.
பின்னர் மாநகராட்சி ஆணையாளர் நாராயண நாயர் கூறியதாவது:–
நெல்லை மாநகரில் பொது மக்களுக்கு மாநகராட்சி வழங்க வேண்டிய சான்றிதழ்கள் மற்றும் ஆணைகள் உடனுக்குடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் மாதந்தோறும் முகாம்கள் நடத்தி அன்றைய தினமே உரிய ஆணை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தமிழக அரசு உத்தரவுப்படி அனுமதியற்ற மனை பிரிவுகளை வரைமுறைப்படுத்த மேலும் 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
இதுதவிர நெல்லை மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து இதில் மக்குகிற குப்பைகளை உரமாக தயாரித்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறோம். இதுவரை இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட 35 டன் உரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது
நெல்லை மாநகரில் குடிநீர் தட்டுப்பாடு இல்லை. மாநகர பகுதிக்கு தேவையான 65 மில்லியன் லிட்டர் தண்ணீர் சீராக கிடைத்து வருகிறது. ஒரு மனிதருக்கு தினமும் 135 லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும். இதில் சராசரியாக 110 லிட்டர் முதல் 120 லிட்டர் வரை தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. கடுமையான வறட்சி ஏற்பட்டாலும் குடிநீர் விநியோகம் பாதிக்காமல் இருக்க தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் தச்சநல்லூர் மண்டல உதவி ஆணையாளர் சுப்புலட்சுமி, பாளையங்கோட்டை உதவி ஆணையாளர் அய்யப்பன், உதவி செயற்பொறியாளர் சாந்தி, சுகாதார அலுவலர் அரசகுமார் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story