கொலை செய்து தோட்டத்தில் புதைக்கப்பட்ட கதாசிரியரின் மகன் உடலை தோண்டி எடுத்து டாக்டர்கள் பரிசோதனை
கொலை செய்யப்பட்டு கொடைரோடு அருகே தோட்டத்தில் புதைக்கப்பட்ட கதாசிரியரின் மகன் உடலை, தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுத்து டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.
கொடைரோடு,
மதுரை கோச்சடை டோக் நகர் பகுதியை சேர்ந்தவர் சவுபா என்ற சவுந்தரபாண்டி (வயது 55). பிரபல பத்திரிகையாளரான இவர், சீவலப்பேரி பாண்டி படத்தின் கதாசிரியராக பணியாற்றி உள்ளார். அவருடைய மனைவி லதா பூர்ணம், கோவில்பட்டியில் உள்ள அரசு கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வருகிறார்.
சவுந்தரபாண்டியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக லதா பூர்ணம் கோவில்பட்டியில் தனியாக வசித்து வருகிறார். இவர்களுடைய ஒரே மகன் விவின் (25). போதைக்கு அடிமையான இவர், வேலைக்கு செல்லாமல் தாய்-தந்தையுடன் மாறி மாறி வசித்து வந்தார்.
இந்தநிலையில் தனது மகனை காணவில்லை என்றும், கணவர் மீது சந்தேகம் இருப்பதாகவும் லதா பூர்ணம், கடந்த 5-ந்தேதி மதுரை எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சவுந்தரபாண்டியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், பெற்ற மகனை சவுந்திரபாண்டியே இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. மேலும் விவின் உடலை, திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள பள்ளப்பட்டியில் உள்ள தனது தோட்டத்துக்கு சவுந்தரபாண்டி கொண்டு சென்று குழியில் உடலை போட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்து உள்ளார். மேலும் யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காகவும், தடயங்களை அழிப்பதற்காக குழியை மூடியதும் அவருக்கு உடந்தையாக 2 பேர் செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து சவுந்தரபாண்டியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த 2 பேரும் கைது செய்யப்பட்டனர். கைதான 3 பேரையும் மதுரை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை வருகிற 24-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உமா உத்தரவிட்டார்.
இந்தநிலையில் சவுந்தரபாண்டியை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதி கேட்டனர். இதையொட்டி நேற்று ஒருநாள் மட்டும் போலீஸ் காவலுக்கு அனுமதி வழங்கி மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து விவின் உடல் புதைக்கப்பட்ட இடத்துக்கு சவுந்தரபாண்டியை போலீசார் நேற்று அழைத்து வந்தனர். அப்போது, விவின் உடலை புதைத்த இடத்தை சவுந்தரபாண்டி அடையாளம் காட்டினார். நிலக்கோட்டை தாசில்தார் நிர்மலா கிரேஸ், போலீஸ் துணை சூப்பிரண்டு கார்த்திகேயன், மதுரை எஸ்.எஸ்.காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் விவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள் ராஜவேலு, சதாசிவம் ஆகியோர் தலைமையிலான மருத்துவக்குழுவினர் விவின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் ஆய்வுக்காக, உடலின் முக்கிய பாகங்களை மட்டும் மதுரையில் உள்ள ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். மீதமுள்ள உடல் பாகங்கள் தாய்மாமன் பாண்டியராஜிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் சவுந்தரபாண்டியை போலீசார் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பின்னர் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story