காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த கணவன்-மனைவி உள்பட 9 பேர் பலி கேரளாவுக்கு சுற்றுலா சென்றபோது விபத்து


காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த கணவன்-மனைவி உள்பட 9 பேர் பலி கேரளாவுக்கு சுற்றுலா சென்றபோது விபத்து
x
தினத்தந்தி 11 May 2018 10:07 PM GMT (Updated: 11 May 2018 10:07 PM GMT)

பெரம்பலூர் அருகே கார்கள் மோதிக்கொண்டதில் காஞ்சீபுரத்தை சேர்ந்த கணவன்-மனைவி-குழந்தைகள் உள்பட 9 பேர் பலியானார்கள்.

பெரம்பலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் சின்ன காஞ்சீபுரம் திருமலை நகரை சேர்ந்தவர் எஸ்.ஆர்.மோகன் (வயது 36). இவர் கைத்தறி பட்டுப்புடவை உற்பத்தி செய்து ஜவுளி கடைகளுக்கு மொத்தமாக வியாபாரம் செய்யும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி லட்சுமி. இவர்களது மகள்களான பவித்ரா 8-ம் வகுப்பும், நவீதா 6-ம் வகுப்பும், மகன் வரதராஜன் 1-ம் வகுப்பும் தேர்வு எழுதி கோடை விடுமுறையில் வீட்டில் இருந்தனர்.

இந்நிலையில் மோகன் கோடை விடுமுறையையொட்டி கேரளா மாநிலம் தேக்கடி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்றுவர திட்டமிட்டிருந்தார். இதற்காக மோகன் தனது குடும்பத்தினர் மற்றும் அக்கா கணவர் முரளி, மற்றொரு அக்காவின் மகளான கல்லூரி மாணவி மேகலா ஆகியோரை அழைத்துக்கொண்டு காரில் நேற்று முன்தினம் மாலை சின்ன காஞ்சீபுரத்தில் இருந்து கேரளாவுக்கு புறப்பட்டார்.

அப்போது காரை டிரைவர் பிரபாகரன் (36) ஓட்டினார். மாற்று டிரைவர் பூபதி அவர்களுடன் பயணம் செய்தார். அந்த காரில் மொத்தம் 9 பேர் இருந்தனர்.

கார்கள் மோதல்

கார் நேற்று முன்தினம் நள்ளிரவு 12¼ மணி அளவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் நான்கு ரோடு அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் பெரம்பலூரில் இருந்து வந்த கார் ஒன்று கட்டுபாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையின் தடுப்புச்சுவரில் பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் அந்த கார் நிற்காமல் சினிமாவில் வரும் காட்சிபோல் பாய்ந்து சாலையின் மறுபுறம் மோகன் குடும்பத்தினர் வந்துகொண்டிருந்த கார் மீது விழுந்தது. இதில் மோகன் குடும்பத்தினர் வந்த கார் சுக்கல் சுக்கலாக நொறுங்கியது.

துடிதுடித்து சாவு

காரில் இருந்த மோகன் குடும்பத்தினர் உள்பட 9 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி துடித்தனர். சம்பவ இடத்திலேயே அந்த காரில் இருந்த மோகன், அவரது குடும்பத்தினர் மற்றும் டிரைவர் உள்பட 8 பேரும் ஒவ்வொருவராக பரிதாபமாக இறந்தனர். மாற்று டிரைவர் பூபதி மட்டும் காருக்குள் படுகாயங்களுடன் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அபய குரல் எழுப்பியபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய கார் மேலும் ஓடி மற்றொரு காரின் மீதும் மோதியது. அதில் அந்த காரில் இருந்த 4 பேர் காயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தவரும் படுகாயமடைந்தார்.

காரை உடைத்து மீட்பு

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இதுகுறித்து உடனடியாக பெரம்பலூர் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார், தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயமடைந்த மாற்று டிரைவர் பூபதி மற்றும் மற்ற கார்களில் காயமடைந்த 5 பேரையும் உடனடியாக போலீசார் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் வழியிலேயே பூபதி உயிரிழந்தார்.

காரின் கதவு உள்ளிட்ட பாகங்களை உடைத்தெடுத்து 8 பேரின் உடல்களை போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் வெளியே எடுத்தனர். உடல்களை பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

பலியானவர்கள் விவரம்

விபத்தில் உயிரிழந்தவர்களின் பெயர் விவரம் வருமாறு:-

காஞ்சீபுரம் மாவட்டம் சின்ன காஞ்சீபுரம் திருமலை நகரை சேர்ந்த எஸ்.ஆர்.மோகன் (36), அவரது மனைவி லட்சுமி (32). இவர்களது மகள்கள் பவித்ரா (14), நவீதா (11) மகன் வரதராஜன் (5), மோகனின் அக்கா கணவர் முரளி (55), மற்றொரு அக்காவின் மகள் மேகலா (19) மற்றும் டிரைவர்கள் பிரபாகரன் (36), பூபதி (25).

இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story