பெங்களூருவில் மட்டும் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ.31 கோடி நகை, பணம் பறிமுதல்
பெங்களூருவில் மட்டும், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்ற ரூ.31 கோடி நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் கமிஷனர் சுனில் குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
பெங்களூருவில் மட்டும், உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்ற ரூ.31 கோடி நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று போலீஸ் கமிஷனர் சுனில் குமார் தெரிவித்துள்ளார்.
போலீஸ் கமிஷனர் பேட்டி
பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில் குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு பெங்களூரு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தலை அமைதியான முறையில் நடத்த அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. சட்டசபை தேர்தலையொட்டி கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் உள்பட 10,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுதவிர துணை ராணுவ படை, அதிவிரைவு படை, மத்திய ஆயுதப்படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 186 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ரூ.31 கோடி நகை, பணம் பறிமுதல்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்பு உரிய ஆவணங்கள் இன்றி வாகனங்களில் எடுத்துச் சென்ற ரூ.12¾ கோடி ரொக்கம், ரூ.18¼ கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் பிற பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக 3302 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாநகரில் மட்டும் உரிமம் பெற்று வைத்திருந்த 7,518 பேர் தங்களது துப்பாக்கிகளை போலீசில் ஒப்படைத்துள்ளனர். தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், பெங்களூரு வாக்காளர்கள் எந்த விதமான பயமும் இன்றி தங்களது ஓட்டுக்களை பதிவு செய்யலாம்.
இவ்வாறு போலீஸ் கமிஷனர் சுனில்குமார் கூறினார்.
Related Tags :
Next Story