குடிபோதையில் மோட்டார் சைக்கிளை மாற்றி எடுத்து சென்றனர்: தட்டிக்கேட்ட போலீஸ்காரருக்கு அடி-உதை 4 பேர் கைது


குடிபோதையில் மோட்டார் சைக்கிளை மாற்றி எடுத்து சென்றனர்: தட்டிக்கேட்ட போலீஸ்காரருக்கு அடி-உதை 4 பேர் கைது
x
தினத்தந்தி 11 May 2018 10:23 PM GMT (Updated: 11 May 2018 10:23 PM GMT)

குடிபோதையில் மோட்டார் சைக்கிளை மாற்றி எடுத்து சென்றதை தட்டிக்கேட்ட போலீஸ்காரரை அடித்து உதைத்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திரு.வி.க. நகர்,

சென்னை ஓட்டேரி போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் பிரகாஷ் (வயது 41). போலீஸ்காரரான இவர், போலீஸ் இணை கமிஷனர் சுதாகரிடம் கார் டிரைவராக உள்ளார். பிரகாஷ், புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டலுக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார்.

ஓட்டல் வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்று திரும்பி வந்து பார்த்தபோது, தனது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

ஆனால் அதன் அருகில் அவரது மோட்டார் சைக்கிளை போன்றே மற்றொரு மோட்டார் சைக்கிள் நீண்டநேரமாக கேட்பாரற்று நின்றிருந்தது.

தட்டிக்கேட்டதால் தாக்குதல்

இதனால் சந்தேகமடைந்த பிரகாஷ், தனது மோட்டார் சைக்கிளை யாரோ தவறுதலாக மாற்றி எடுத்து சென்று இருக்கலாம் என்று சந்தேகித்த அவர், அதில் இருந்த ஆர்.சி.புத்தகத்தை எடுத்து பார்த்தார். அதில் சென்னை புளியந்தோப்பை சேர்ந்த அனிதா என்பவரின் பெயரில் மோட்டார் சைக்கிள் பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.

அதில் இருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியபோது, அனிதாவும் தவறு நடந்திருப்பதை உணர்ந்து தனது கணவரிடம் சொல்லி அனுப்பி வைப்பதாக கூறினார். நீண்ட நேரத்துக்கு பிறகு அனிதாவின் கணவர் முருகன்(28) தனது நண்பர்கள் 4 பேருடன் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார். 5 பேரும் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது. எனவே அவர்கள் போதையில் மோட்டார் சைக்கிளை மாற்றி எடுத்து சென்று உள்ளது தெரிந்தது.

அப்போது போலீஸ்காரர் பிரகாஷ், எதற்காக எனது மோட்டார் சைக்கிளை மாற்றி எடுத்து சென்றீர்கள்? என்று தட்டிக்கேட்டதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன் மற்றும் அவருடைய நண்பர்கள் போலீஸ்காரர் பிரகாசை அடித்து உதைத்தனர். இதில் அவருக்கு தாடை உடைந்து ரத்தம் கொட்டியது. பின்னர் அவர்கள் 5 பேரும் தப்பிச்சென்று விட்டனர்.

4 பேர் கைது

அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், படுகாயம் அடைந்த பிரகாசை மீட்டு அரசு பல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி புளியந்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரரை தாக்கிய 5 பேரை தேடி வந்தனர்.

அனிதாவிடம் விசாரித்த போது அவரது கணவர் வீட்டுக்கு வரவில்லை. அவர் நண்பர்களுடன் தலைமறைவாகி இருப்பது தெரிந்தது. அவர்களின் செல்போன் சிக்னலை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள், புளியந்தோப்பு ஆட்டுதொட்டி வளாகத்தில் பதுங்கி இருப்பது தெரிந்தது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அனிதாவின் கணவர் முருகன், அவருடைய நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்(32), ஜியாஉசேன்(34) மற்றும் கொடுங்கையூரைச் சேர்ந்த ஜலாவுதின்(34) ஆகிய 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய வியாசர்பாடியை சேர்ந்த சதீஷ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். 

Next Story