இப்படியும் வாழ்கிறார்கள்: ரெயில்களில் மன உறுதியோடு வியாபாரம் செய்யும் பார்வையற்றோர்


இப்படியும் வாழ்கிறார்கள்: ரெயில்களில் மன உறுதியோடு வியாபாரம் செய்யும் பார்வையற்றோர்
x
தினத்தந்தி 12 May 2018 4:45 AM IST (Updated: 12 May 2018 4:02 AM IST)
t-max-icont-min-icon

மன உறுதியோடு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொரு நாளும் மின்சார ரெயில்களில் வியாபாரம் செய்கின்றனர்.

சூடான முறுமுறுப்பான வேர்க்கடலை ‘பர்பி’ 2 பாக்கெட் 10 ரூபாய் சார்... 4 கமர்க்கெட் 10 ரூபாய் சார்..... காட்டன் கர்ச்சிப் (கைக்குட்டை) 10 ரூபாய் சார்.... ரேஷன் கார்டு, ஏ.டி.எம். கார்டு, சீசன் டிக்கெட் கவர்.... ஊதுபத்தி, சாம்பிராணி, வாசனை திரவியம் சார்..... 5 பால்பாயிண்ட் பேனா 10 ரூபாய் சார்... என்ற வார்த்தைகளை சென்னை மற்றும் புறநகர் பகுதி மின்சார ரெயில்களில் பயணம் செய்பவர்களில் பலரும் கேட்டு இருக்க முடியும்.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் இந்த குரல் தான் அவர்களுடைய வாழ்வாதாரத்தை தூக்கிப்பிடிக்கிறது.

ஒவ்வொரு நாளும் காலை விடியல் பொழுதை நாம் பார்க்க மிகவும் கஷ்டப்படுகிறோம். ஆனால் கண் தெரியாதவர்கள் விடியல் என்பது எப்படி இருக்கும்? அதை பார்க்க மிகவும் ஆசையாக இருக்கிறோம் என்றெல்லாம் கூறுவதை கேட்டு இருக்கிறோம். ஆனால் அவர்கள் ஆசை, நிராசையாகவே உள்ளது.

கண்ணீர் வருகிறது

ஒவ்வொரு நாளும் காலை தங்களுடைய வீட்டில் இருந்து பயணத்தை தொடரும் இவர்கள், சென்னை மற்றும் புறநகர் ரெயில் நிலையங்களில் தங்களுடைய வியாபாரத்தை மேற்கொள்கின்றனர்.

குறிப்பிட்ட தூரம் வரை தங்களுடைய எல்லையை முடிவு செய்து கொண்டு ரெயில்களில் ஏறி, இறங்கி இரவு 7 மணி வரை தங்கள் தொழிலை செய்கின்றனர். இதில் அவர்களுக்கு பெரிய அளவில் வருமானம் கிடைக்காவிட்டாலும், அது போதும் என்ற அளவில் வியாபாரத்தை இன்றளவும் தொடருகின்றனர்.

ரெயில்களில் பயணம் செய்பவர்களில் பலர் இவர்களிடம் இரக்கப்பட்டு பொருட்கள் வாங்குவதும் உண்டு. சிலர் தேவைக்கு வாங்குபவர்களும் உண்டு.

கண் தெரிந்தவர்களே ரெயில்களில் ஏறி இறங்குவதில் அச்சம் கொள்கிறார்கள். ஆனால் கண் தெரியாத நிலையிலும், மிகவும் ஜாக்கிரதையாக ஒவ்வொரு ரெயில் நிலையம் வரும் போதும், இறங்கி அடுத்த ரெயில் பெட்டிக்கு இவர்கள் மாறுவது விந்தைதான்.

ஆபத்தான முறையில் தான் ஒவ்வொரு நாளும் இந்த பயணத்தை மேற்கொண்டு, வருவாய் ஈட்டி தங்கள் வாழ்வாதார தேவையை நிவர்த்தி செய்து கொள்கின்றனர். இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுடைய பின்னணி வாழ்க்கையை கேட்டால், கண்ணீர் வருகிறது. அந்த அளவுக்கு அடிபட்டு, மிதிபட்டு தான் வாழ்க்கையை வாழ்கின்றனர்.

மனஉறுதி தான் மூலதனம்

தங்களுக்கு கிடைக்கும் வருவாயில், குடும்பத்தேவையை சந்தித்த பிறகு, அடுத்த முறை வியாபாரத்துக்கு தேவையான பொருட்கள் வாங்க முடியாமல் கடன் வாங்கி, ஒவ்வொரு நாளும் அல்லல்படுபவர்களும் இருக்கின்றனர். சிலர் தங்கள் பெயரை கூற பயப்படுகிறார்கள்? ஏன் என்று கேட்டால், நாங்கள் பேட்டிகொடுத்தால், நாளைக்கு இதே இடத்தில் மீண்டும் வியாபாரம் செய்ய போலீசார் அனுமதிக்கமாட்டார்கள். எனவே வேண்டாம் எங்களை விட்டுவிடுங்கள் என்று கூறி சோகத்துடன் கடந்து சென்றனர்.

என்ன சொல்லி என்ன ஆகப்போகுது? இது தான் எங்கள் நிலைமை? போங்க சார்... போய் உங்கள் வேலையை பாருங்கள் சார்.... என்று சலிப்புடன் சொல்லி கடந்து போனவர்களும் சிலர் இருக்கின்றனர்.

இதுகுறித்து பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளில் சிலர்(பெயர் போட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்) கூறும்போது, ‘வருமானம் குறைவுதான், இருந்தாலும் குடும்பம் ஆகிவிட்டது, வேறுவழியில்லை. எங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்று சொல்லிவிடமுடியாது. இதற்காக வருத்தப்பட்டதும் இல்லை. மன உறுதிதான் எங்கள் மூலதனம். அது இருக்கும் வரை நாங்கள் உழைப்போம். கடவுள் இருக்கிறார். அன்றாட தேவைகளை அவர் எங்களுக்கு பூர்த்தி செய்கிறார். எங்களிடம் பொருட்கள் வாங்கும் ஒவ்வொருவரையும் கடவுள் ரூபமாக தான் பார்க்கிறோம்’ என்றனர். 

Next Story