100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்தக்கோரி 22-ந்தேதி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம்


100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்தக்கோரி 22-ந்தேதி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 12 May 2018 5:23 AM GMT (Updated: 12 May 2018 5:23 AM GMT)

100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்தக்கோரி வருகிற 22-ந்தேதி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என விவசாய தொழிலாளர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவாரூர்,

திருவாரூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வீராச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஞானமோகன் முன்னிலை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் கலந்து கொண்டு பேசினார். இதில் விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மாசிலாமணி, விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜெயராமன், மகேந்திரன், குணசேகரன், நாகராஜன், மூர்த்தி, சிவபிரகாசம், மாரியப்பன், அம்சவள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் ஏழை எளிய மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு படிப்படியாக குறைத்து வருகிறது. இதனால் 100 நாள் வேலை திட்டத்தை நீத்து போக செய்வதற்காக நடவடிக்கை எடுத்து வருகிறது.

எனவே 100 நாள் வேலை திட்டத்தை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நிபந்தனையின்றி உடனடியாக செயல்படுத்திடவும், இந்த திட்டத்தை நகராட்சி, மற்றும் பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுப்படுத்திடவும் வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Next Story