மாவட்ட செய்திகள்

நீர்நிலைகளில் நீச்சல் தெரிந்த நபர்களை நியமிக்க நடவடிக்கை கலெக்டர் தகவல் + "||" + Measures to appoint people who are swimming in waters

நீர்நிலைகளில் நீச்சல் தெரிந்த நபர்களை நியமிக்க நடவடிக்கை கலெக்டர் தகவல்

நீர்நிலைகளில் நீச்சல் தெரிந்த நபர்களை நியமிக்க நடவடிக்கை கலெக்டர் தகவல்
நீரில் மூழ்கி யாரேனும் உயிர் இழந்து விடக்கூடாது என்பதற்காக, பொதுமக்கள் அதிக அளவில் குளிக்கும் நீர்நிலைகளில் நீச்சல் தெரிந்த நபர்களை பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் தெரிவித்தார்.
தேனி,

தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கோடை விடுமுறை என்பதால், தேர்வுகள் முடிவுற்று, பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் விடுமுறையினை கழிப்பதற்காக திருவிழாக்கள், உறவினர் இல்லங்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் நிலை அதிகரித்துள்ளது. அவ்வாறு செல்லும் இடங்களில் நீர்நிலைகளான ஆற்றுப்படுகைகள், ஏரிகள், குளங்களில் பாதுகாப்பு இல்லாமலும், பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் உடனில்லாமல் குளிப்பதினாலும் எதிர்பாராத விபத்துக்களில் சிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.


கோடை விடுமுறை நாட்கள் என்பதாலும், மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்து வருவதாலும், ஆறு மற்றும் ஓடைகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. எனவே, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை நீர்நிலைகளில் குளிப்பதற்கு தனியாக அனுப்பிட வேண்டாம். எவ்வித அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க பெற்றோர்களும், பொதுமக்களும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு தங்களின் குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும்.

தங்களின் குழந்தைகள் எங்கு செல்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்பதை பெற்றோர்கள் கவனமாக கண்காணித்திட வேண்டும். பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு நீச்சல் தெரியாதபட்சத்தில் ஆறு, குளம், ஏரி மற்றும் அணைக்கட்டு பகுதிகளில் குளிக்க அனுமதிக்கக்கூடாது. நீர்நிலைகளில் சுழல் உள்ள பகுதிகள், புதை மணல் உள்ள பகுதிகள், சகதி நிறைந்த பகுதிகள், ஆழமான பகுதிகள் போன்ற இடங்களின் தன்மை அறியாமல் குளிக்க செல்வதோ, குதித்து குளிப்பதோ கூடாது.

மேலும், மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் ஆபத்தை குறைக்க ஆபத்தான இடங்களை கண்டறிந்து அங்கு எச்சரிக்கை பலகை வைத்திடவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அதிக அளவில் குளிக்கும் இடங்களில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நீச்சல் தெரிந்த நபர்களை பணியமர்த்திடவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, நீர்நிலைகளில் குழந்தைகள், பொதுமக்கள் குளிக்கும் போது முழு கவனத்துடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.