வாழப்பாடியில் சலூன் கடைக்காரர் கொலையில் லாரி டிரைவர் கைது


வாழப்பாடியில் சலூன் கடைக்காரர் கொலையில் லாரி டிரைவர் கைது
x
தினத்தந்தி 12 May 2018 2:21 PM IST (Updated: 12 May 2018 2:21 PM IST)
t-max-icont-min-icon

வாழப்பாடியில், சலூன் கடைக்காரர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

வாழப்பாடி,

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் பெருமாபாளையத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 40). சலூன் கடைக்காரர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் மகன் லாரி டிரைவர் குமார் (31), நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் தமிழ்செல்வன் வீட்டுக்கு சென்று, அவரது மூத்த மகளை தனக்கு திருமணம் செய்து தருமாறு கேட்டுள்ளார்.

அது தொடர்பாக தமிழ்செல்வனுக்கும், குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது குமார், தமிழ்செல்வனின் பிறப்பு உறுப்பில் மிதித்துவிட்டு ஓடிவிட்டார். இதில் வலி தாங்கமுடியாமல் துடிதுடித்த தமிழ்செல்வன் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் தமிழ்செல்வன் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, குமாரை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் குமார், தமிழ்செல்வனின் மகளை தனக்கு திருமணம் செய்துதர மறுத்ததால் ஆத்திரத்தில் அவரது பிறப்பு உறுப்பில் மிதித்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் குமாரை கைது செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story