குற்றச்செயல்களை தடுக்க வெளி மாநில வாலிபர்களை கண்காணிக்க கோரிக்கை


குற்றச்செயல்களை தடுக்க வெளி மாநில வாலிபர்களை கண்காணிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 12 May 2018 10:37 AM GMT (Updated: 12 May 2018 10:37 AM GMT)

சிவகாசிபகுதியில் நடைபெறும் குற்றச்செயல்களை தடுக்க வெளி மாநில வாலிபர்களின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று சமூகஆர்வலர்கள் மாவட்ட போலீஸ் நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

சிவகாசி,

தொழில் நகரமான சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் 600-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் உள்ளன. அதே போல் 500-க்கும் அதிகமான அச்சகங்கள் மற்றும் தீப்பெட்டி ஆலைகள் உள்ளன. இந்த தொழில் நிறுவனங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்களை தவிர வெளிமாநிலத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் பணியாற்றி வருகிறார்கள்.

குறிப்பாக பட்டாசு ஆலைகளில் அதிக அளவில் வெளிமாநில இளைஞர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களை வேலைக்கு அமர்த்த இடைத்தரகர்கள் சிவகாசியில் உள்ளனர். குறைந்த கூலி கொடுத்து உணவு மற்றும் இருப்பிட வசதி செய்து கொடுத்தால் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கும் அதிகமாக அவர்கள் வேலை செய்ய தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் இங்குள்ள ஆலை உரிமையாளர்கள் வெளி மாநிலத்தை சேர்ந்த வாலிபர்களை அதிகமாக வேலைக்கு வைத்துள்ளதால், அவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாக உள்ளது. சிவகாசியில் இருக்கும் பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலைகளில் மட்டும் பணியாற்றி வந்தவர்கள் தற்போது ஓட்டல் உள்பட பிற நிறுவனங்களில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்கள்.

இவர்களின் பின்னணி என்ன? என்று தெரியாமலேயே இவர்களை இங்குள்ளவர்கள் வேலைக்கு வைத்துள்ளனர். சிவகாசியில் அவ்வப்போது ஏற்படும் குற்றச்சம்பவங்களில் சில நேரங்களில் குற்றவாளிகள் குறித்து தெரியாமல் போய்விடுகிறது. இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் வெளிமாநிலவாலிபர்கள் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் உரிய தடயம் இல்லாமல் உண்மை குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போகிறது.

கடந்தசில நாட்களுக்கு முன்பு சிவகாசி பஸ்நிலையத்தில் பீகாரை சேர்ந்த 3 வாலிபர்கள் சித்துராஜபுரத்தை சேர்ந்தவரிடம் பணத்தை திருட முயன்ற போது, சிவகாசி டவுன் போலீசார் அவர்களை கைது செய்தனர். இது போல் பலர் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டும், அவர்களில் பலர் குற்றச்சம்பவங்களுக்கு பின்பு தங்கள் சொந்த ஊருக்கு சென்றுவிடுகிறார்கள். இதனால் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் போலீசார் திணறி வருகிறார்கள். அதனால் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள நிறுவனங்களில் பணியாற்றும் வெளி மாநில வாலிபர்கள் குறித்த தகவல்களை அந்தந்த நிறுவனங்கள் மாவட்ட போலீஸ் நிர்வாகத்துக்கும், உள்ளூர் காவல் நிலையத்துக்கும் தெரிவிக்க வேண்டும்.

அதே போல் தங்கள்நிறுவனத்தில் பணியாற்றும் வெளிமாநிலநபரின் ஆதார் அட்டை உள்ளிட்ட முக்கியஆவணங்களின் நகல்கள் வாங்கி வைக்க வேண்டும். தங்கள் சொந்த ஊரில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட சிலர் இங்கு வந்து வேலை செய்து தலைமறைவு வாழ்க்கை வாழலாம். எனவே வெளிமாநில நபர்களை தீவிரமாக கண்காணித்து சிவகாசி மற்றும் சுற்றுப்பகுதியில் குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கையை மாவட்ட போலீஸ் நிர்வாகம் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story