விருதுநகரில் பொதுமக்களிடம் கவர்னர் மனுக்கள் வாங்கினார்


விருதுநகரில் பொதுமக்களிடம் கவர்னர் மனுக்கள் வாங்கினார்
x
தினத்தந்தி 12 May 2018 10:41 AM GMT (Updated: 12 May 2018 10:41 AM GMT)

விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் கவர்னர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். அப்போது ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் நினைவிடம் கட்டுவதை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் மனு கொடுக்கப்பட்டது.

விருதுநகர்,

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று காலை ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் சாமிதரிசனத்தை முடித்து விட்டு விருதுநகருக்கு காலை 11 மணிக்கு வந்தார். இங்கு பராசக்தி மாரியம்மன் கோவிலில் அம்மனை தரிசனம் செய்த பின்பு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகைக்கு சென்றார். அங்கு ஏற்கனவே கவர்னரிடம் மனுக்களை கொடுக்க விரும்பியவர்கள் பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் 260 பேர் தங்கள் பெயர்களை பதிவு செய்து இருந்தனர்.

பகல் 12¼ மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற தொடங்கினார். அவருடன் கவர்னரின் செயலாளரான ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜகோபால், கலெக்டர் சிவஞானம், போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன், மாவட்ட வருவாய் அதிகாரி ஆனந்தகுமார் ஆகியோர் உடன் இருந்தனர். பொதுமக்கள் தரும் மனுக்களை கவர்னரின் செயலாளர் பெற்று, மாநில அளவிலான பிரச்சினை குறித்த மனுக்களை கவர்னரிடமும், மாவட்ட அளவிலான பிரச்சினைகள் தொடர்பான மனுக்களை கலெக்டரிடமும் கொடுத்ததாக கூறப்படுகிறது.

நிகழ்ச்சியில் மனுக்கள் கொடுக்க பெயர்கள் பதிவு செய்தவர்களை வரிசையாக அனுப்பாமல், பின்னால் வந்தவர்களை முதலிலும், ஏற்கனவே காத்திருந்தவர்களை தாமதமாகவும் அனுப்பியதால் அங்கு கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது. இதனால் மனுக்கள் கொடுப்பது சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து போலீசார் முன்பதிவு செய்தவர்களை வரிசையாக மனுக்கள் கொடுக்க ஏற்பாடு செய்தனர். அதன்பின்பு கவர்னரிடம் மனுக்கள் கொடுப்பது தொடர்ந்தது. சுமார் 2 மணி நேரம் தொடர்ந்து மனுக்களை பெற்ற கவர்னர் மதியம் 2¼ மணி அளவில் வெளியில் வந்தார். அப்போது அங்கு காத்திருந்தவர்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராமச்சந்திரராஜா தனது மனுவில், கரும்பு விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரைஆலை கொடுக்க வேண்டிய நிலுவை தொகையை உடனே வழங்க நடவடிக்கை கோரி இருந்தார். ஆனால் அந்த மனு கலெக்டரிடமே கொடுக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்ததாக தெரிவித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டார விவசாய சங்க செயலாளர் முத்தையா கொடுத்த மனுவில், 1970-ம் ஆண்டு ரூ.800 கோடியில் அழகர் அணை கட்டும் திட்டத்திற்கு 8-வது ஐந்தாண்டு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கு அப்போதைய கேரள முதல்வர் அந்தோணியும், நீர் பாசன அமைச்சர் ஜேக்கப்பும் ஒப்புதல் அளித்தும் அந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை. எனவே இந்த திட்டத்தை உடனே நிறைவேற்ற கோரியிருந்தார்.

இந்திய விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் காரியாபட்டி ஒன்றியத்தில் நாசர்புலியங்குளம் பகுதியில் கண்மாய்களில் சவடு மண் அள்ள தடைவிதிக்க கோரியும், இதுகுறித்து புகார் கொடுப்பவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் மனு கொடுக்கப்பட்டது.

மதுரை கோட்ட பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அணி தலைவர் சங்கரபாண்டி, உச்சநீதிமன்றத்தால் குற்றவாளி எனஅறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு அரசு செலவில் ரூ.50 கோடியில் நினைவிடம் கட்டவும், ரூ.20 கோடியில் வேதா நிலையத்தை புதுப்பிக்கவும் அனுமதி வழங்ககூடாது என்றும், அவர்கள் விருப்பப்பட்டால் அ.தி.மு.க. கட்சியில் இருந்து செலவு செய்யுமாறு அறிவுறுத்த வேண்டும் என்று மனு கொடுத்தார்.

சிவகாசி டான்பாமா சங்கதலைவர் ஆசைத்தம்பி, செயலாளர் மாரியப்பன் ஆகியோர் பட்டாசு தொழிலுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாசு படுத்தும் விதியில் இருந்து முழு விலக்கு அளிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய கோரி மனு கொடுத்தனர். விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்த தொழிலாளி வேல்முருகன் என்பவரின் மனைவி மலர் தனது கணவர் இறந்ததற்கான உடல் பரிசோதனை சான்றிதழை வழங்க கோரியும், தனது குடும்பத்தினருக்கு கூடுதல் நிவாரண உதவி கேட்டும் மனு கொடுத்தார்.

விருதுநகர் வியாபார தொழில்துறை சங்கத்தின் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. அதில் விருதுநகரில் பாதாள சாக்கடை திட்டத்தையும் புதிய பஸ்நிலையத்தையும் உடனே செயல்படுத்திட வேண்டும். விருதுநகரில் விவசாய கல்லூரி தொடங்கவும், மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை முறையாக பராமரிக்கவும், அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும். தாம்பரம்-நெல்லை இடையே அந்தியோதயா எக்ஸ்பிரஸ், செங்கோட்டை-சென்னை இடையேயான சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை தினசரி இயக்க வேண்டும். மதுரை-விருதுநகர் இடையே இருவழி ரெயில்பாதை திட்டத்தை விரைவுபடுத்தவும், செங்கோட்டை-ராமேசுவரம் இடையே பயணிகள் ரெயிலை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

விருதுநகரில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள தேவையான துப்புரவு பணியாளர்களை நியமிக்க விருதுநகர் விழுதுகள் என்ற அமைப்பின் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டம், கிராம முன்னேற்றதிட்டம், விவசாயிகள் வாழ்வாதாரத்தை பெருக்கும் திட்டம் போன்ற திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், இந்த திட்டங்களுக்கான மதிப்பீடுகள் குறித்து மாவட்ட மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று மனு கொடுக்கப்பட்டது.

கவுண்டம்பட்டி கிராமமக்கள் சார்பில் தங்கள் கிராமப்பகுதியில் சாலைகளை சீரமைக்க கோரி மனு கொடுக்கப்பட்டது. விருதுநகர் தந்திமரத்தெருவில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி முறையாக செயல்பட உரிய நடவடிக்கை கோரி அந்த பகுதி மக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. விருதுநகர் யூனியன் துலுக்கப்பட்டி பகுதியில் இலவச கழிப்பறை கட்டிடம் மிகவும் தரமற்றதாக கட்டப்பட்டுள்ளதாகவும், அதனை ஆய்வு செய்து முறையாக கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க கோரியும் மனு கொடுக்கப்பட்டது.

Next Story