கோத்தகிரியில் நவீன மறுநில அளவை பணிகள் தொடங்கின


கோத்தகிரியில் நவீன மறுநில அளவை பணிகள் தொடங்கின
x
தினத்தந்தி 12 May 2018 10:47 AM GMT (Updated: 12 May 2018 10:47 AM GMT)

நீலகிரி மாவட்டத்தில் முதல்முறையாக கோத்தகிரியில் நவீன மறுநில அளவை பணிகள் தொடங்கின.

கோத்தகிரி,

‘டிஜிட்டல் இந்தியா நில ஆவணங்கள் நவீனமயமாக்கல்’ திட்டத்தின் கீழ் நவீன மறுநில அளவை ஆய்வாளர் அலுவலகத்தை கோத்தகிரியில் கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் படி சாட்டிலைட் உதவியுடன் நவீன உபகரணங்களை வைத்து மிகவும் துல்லியமாக மறு அளவை செய்யும் பணிக்காக நீலகிரி மாவட்டத்தில் முதல் முறையாக கோத்தகிரி தாலுகா தேர்வு செய்யப்பட்டது.

இப்பணிக்காக சிறப்பு நில அளவை குழு தலைமை அளவையர் முருகானந்தம் பிரபா மற்றும் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் கோத்தகிரி வந்து டிஜிட்டல் ஜி.பி.எஸ். கருவிகளை கொண்டு மறு நில அளவை பணிகளை தொடங்கியதுடன் உள்ளூர் நில அளவையர்களுக்கு இது குறித்து பயிற்சியும் அளித்தனர்.

இந்த நவீன மறுநில அளவை பணிகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு மாநில நில அளவை துறையின் இயக்குனர் டாக்டர் செல்வராஜ் கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்திற்கு நேற்று வந்தார். அவர் நில அளவை பணியில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நவீன மறுநில அளவை குறித்தும், பணிகளை மேற்கொள்ள வேண்டிய விதங்கள் குறித்தும் விளக்கி கூறினார். இதனை தொடர்ந்து கோத்தகிரி காந்தி மைதானம் பகுதியில் மறு நில அளவை செய்யும் பணிகளை தொடங்கி வைத்தார். இது குறித்து மாநில நில அளவை துறை இயக்குனர் செல்வராஜ் கூறிய தாவது:-

தமிழகத்தில் நவீன மறுநில அளவை செய்யும் பணிக்காக கிருஷ்ணகிரி, கன்னியாகுமாரி மற்றும் நீலகிரி ஆகிய 3 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி தாலுகாவில் தான் முதலாவதாக மறுநில அளவை பணிகள் தற்போது தொடங்கி உள்ளன. முதலில் நில அளவை கற்கள் மற்றும் இடம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு பின்னர் நவீன தொழில் நுட்பத்துடன் மிகவும் துல்லியமாக நில அளவை செய்து சர்வே கல் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த பணிகள் முழுமையாக நிறைவு பெற ஒரு ஆண்டு தேவைப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட நில அளவை துணை இயக்குனர் கோவிந்தசாமி, கோத்தகிரி தாசில்தார் தனபாக்கியம், தலைமை அளவையர் ராஜேஷ் பிர்க்கா, சர்வேயர் அப்துல்காதர், நில அளவையர் சங்க மாவட்ட நிர்வாகி உதயகுமார் ஆகியோர் உடனிருந்தனர். 

Next Story