முதுமலை பகுதியில் சாலை ஓரத்தில் உலா வரும் காட்டு யானைகள்


முதுமலை பகுதியில் சாலை ஓரத்தில் உலா வரும் காட்டு யானைகள்
x
தினத்தந்தி 12 May 2018 10:30 PM GMT (Updated: 12 May 2018 7:15 PM GMT)

முதுமலை பகுதியில் சாலை ஓரத்தில் காட்டு யானைகள் உலா வருகின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மசினகுடி,

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட வறட்சி காரணமாக முதுமலை வனப்பகுதியில் மரம், செடி, கொடிகள் காய்ந்தன. நீர்நிலைகள் வறண்டன. இதனால் காட்டு யானை உள்பட வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் பசுந்தீவனம் தேடி இடம் பெயர்ந்து சென்றன. இதன் காரணமாக வனப்பகுதியில் காட்டு யானைகளை காண முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக முதுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதியில் மரம், செடிகள் செழித்து பசுமையாக மாற தொடங்கி உள்ளது. மேலும் வனப்பகுதிக்குள் உள்ள நீர் நிலைகளில் தண்ணீர் நிரம்பி உள்ளன. இதன் காரணமாக இடம் பெயர்ந்து சென்ற காட்டு யானைகள் மீண்டும் முதுமலை வனப்பகுதிக்கு வரத்தொடங்கி உள்ளன.

இதனால் தெப்பகாடு - கக்கநல்லா தேசிய நெடுஞ்சாலை, தொரப்பள்ளி சாலை, மசினகுடி சாலை உள்ளிட்ட முக்கிய சாலை ஓரங்களில் காட்டு யானைகள் கூட்டமாக நடமாடுவதை காண முடிகிறது. இதை அந்த வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்து செல்கின்றனர். 

Next Story