நெல்லை அருகே, இலவச பட்டா கேட்டு நிலஅளவைத்துறை அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகை


நெல்லை அருகே, இலவச பட்டா கேட்டு நிலஅளவைத்துறை அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 12 May 2018 9:30 PM GMT (Updated: 12 May 2018 7:46 PM GMT)

நெல்லை அருகே இலவச பட்டா கேட்டு நிலஅளவைத்துறை அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

பேட்டை, 

நெல்லை அருகே இலவச பட்டா கேட்டு நிலஅளவைத்துறை அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

அதிகாரிகளை முற்றுகை

நெல்லையை அடுத்து சீதபற்பநல்லூர் அருகே வெட்டுவான்குளம் மெயின் ரோட்டில் 4½ ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை வீடில்லா ஏழைகளுக்கு இலவச பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு அறிவித்தது. இதற்கு அந்த ஊரை சேர்ந்த 40 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் அந்த ஊரை சேர்ந்த 8 பேருக்கும், அதன் அருகே உள்ள மற்ற ஊர்களை சேர்ந்தவர்களுக்கும் தலா 2¾ சென்ட் வீதம் பிரித்து வழங்க முடிவு செய்யப்பட்டது.

கடந்தாண்டு நவம்பர் மாதம் பாளையங்கோட்டையில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு தலா 2¾ சென்ட் வீதம் இலவச பட்டாக்களை வழங்கினார். இந்நிலையில் அந்த நிலத்தை அளந்து கல் ஊன்றுவதற்காக நில அளவையர் தனலட்சுமி தலைமையில் தலையாரிகள் ராமகிருஷ்ணன், மல்லிகா ஆகியோர் நேற்று வெட்டுவான்குளம் ஊருக்கு வந்தனர்.

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் திரண்டு வந்து அதிகாரிகளை முற்றுகையிட்டனர். எங்கள் கிராமத்தை சேர்ந்த பலருக்கு இலவச பட்டா கொடுக்காமல் வேறு ஊரை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்ததும் சீதபற்பநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் அந்த பகுதிக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி, வேறு இடத்தில் இலவச பட்டா கிடைக்க ஏற்பாடு செய்வதாக கூறப்பட்டதை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

ஏற்கனவே நிலத்தை அளப்பதற்காக அதிகாரிகள் 3 முறை வந்திருந்தனர். அப்போதும் இதே போல் கிராம மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story