மாவட்ட செய்திகள்

மதுரை ரெயில் நிலையத்தில் இன்று முதல் முன்பதிவு மைய நேரம் மாற்றம் + "||" + Madurai Railway Station Reservation time from today

மதுரை ரெயில் நிலையத்தில் இன்று முதல் முன்பதிவு மைய நேரம் மாற்றம்

மதுரை ரெயில் நிலையத்தில் இன்று முதல் முன்பதிவு மைய நேரம் மாற்றம்
மதுரை ரெயில் நிலையத்தில் முன்பதிவு மையத்தின் நேரம் இன்று முதல் மாற்றப்பட உள்ளது.

மதுரை,

இந்திய ரெயில்வேயை தனியார் மயமாக்கும் முயற்சிகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கிடையே, ரெயில்வேயில் உள்ள டிக்கெட் முன்பதிவு மைய கிளார்க்குகள் மற்றும் சாதாரண டிக்கெட் கிளார்க்குகளை ஒருங்கிணைக்கும் பணிகள் நடந்து வந்தது. இந்த ஒருங்கிணைப்பால், அவரவர் பெறும் சம்பளத்தில் எந்த மாற்றமும் வராது என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பணி மூப்பு பாதிக்கப்படும் என்று ஊழியர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், மதுரை கோட்ட ரெயில்வேயில் முன்பதிவு மைய கிளார்க்குகளாக பணியாற்றுபவர்களில் பெரும்பாலானோர் டிக்கெட் வழங்கும் இடம், தகவல் மையம், வர்த்தக பிரிவு என பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதாவது, 55 முன்பதிவு மைய கிளார்க்குகளில் தற்போது 20 முன்பதிவு மைய கிளார்க்குகள் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால், மதுரை ரெயில்நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்தின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

மதுரை ரெயில்நிலையத்தின் கிழக்கு நுழைவுவாயில் பகுதியில் 6 முன்பதிவு மைய கவுண்ட்டர்கள், கிரெடிட் கார்டு, மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ஒரு கவுண்ட்டர் என செயல்பட்டு வந்தது. இந்த கவுண்ட்டர்கள் அனைத்தும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை 2 ஷிப்டுகளாக செயல்பட்டு வந்தன. இந்தநிலையில் மதுரை ரெயில் நிலையத்தில் 3 முன்பதிவு கவுண்ட்டர்கள் எந்த முன்னறிவிப்பும் இன்றி மூடப்பட்டன.

தற்போது மதுரை ரெயில்நிலையத்தில் 3 முன்பதிவு கவுண்ட்டர்கள் மட்டும் செயல்பட்டு வரும் நிலையில், இதில் ஒரேயொரு கவுண்ட்டர் மட்டும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். மற்ற 2 கவுண்ட்டர்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்படும்.

கிரெடிட் கார்டு, மூத்தகுடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான கவுண்ட்டர் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். மதுரை ரெயில்நிலைய முன்பதிவு மையத்தில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 2,400 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. இதன்மூலம் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் வருமானமாக கிடைத்து வருகிறது.

இந்த நேர மாற்றத்தால் பயணிகள் குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அரசு நிர்வாகம் வருமானத்தை மட்டும் கணக்கில் கொள்ளாமல், பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அதற்கு பதிலாக, பொதுமக்களுக்கு ரெயில்வே நிர்வாகம் சிரமம் ஏற்படும் வகையில் செயல்படுவது பயணிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.