ஓடும் பஸ்சில் டிராவல்ஸ் அதிபரிடம் ரூ.45 ஆயிரம் அபேஸ் பெங்களூருவை சேர்ந்தவர் கைது


ஓடும் பஸ்சில் டிராவல்ஸ் அதிபரிடம் ரூ.45 ஆயிரம் அபேஸ் பெங்களூருவை சேர்ந்தவர் கைது
x
தினத்தந்தி 13 May 2018 3:45 AM IST (Updated: 13 May 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் ஓடும் பஸ்சில் டிராவல்ஸ் அதிபரிடம் ரூ.45 ஆயிரம் அபேஸ் செய்ததாக பெங்களூருவை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி,

பெரம்பலூர் மாவட்டம் வடக்கு குரும்பலூரை சேர்ந்தவர் சிலம்பரசன்(வயது33). இவர், பெரம்பலூரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் திருச்சி பொன்மலையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சிலம்பரசன் வந்தார். அதன் பின்னர் உறவினர்களுடன் திருச்சி சத்திரம் பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் துணி எடுப்பதற்காக புறப்பட்டனர்.

பொன்மலையில் இருந்து சத்திரம் பஸ் நிலையம் செல்லக்கூடிய டவுன் பஸ்சில் சிலம்பரசன், அவரது நண்பர் தமிழ்ச்செல்வன் மற்றும் உறவினர்கள் ஏறி பயணம் செய்தனர்.

அப்போது பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஒருவர், சிலம்பரசன் சட்டைப்பையில் வைத்திருந்த மணிபர்சை நைசாக அபேஸ் செய்து விட்டு நழுவினார். அப்போது அருகில் பயணித்த நண்பர் தமிழ்ச்செல்வன், அந்த திருட்டு ஆசாமியை கையும் களவுமாக பிடித்தார். அபேஸ் செய்த மணிபர்சில் ரூ.45 ஆயிரம் இருந்தது.

பின்னர், அந்த ஆசாமி திருச்சி கோட்டை குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அவரை போலீசார் கைது செய்தனர். கைதானவர் பெயர் கிருஷ்ணப்பா(58), கர்நாடக மாநிலம் பெங்களூரு எஸ்.என்.புரத்தை சேர்ந்தவர். ஊர், ஊராக சுற்றித்திரியும் அவர், யாரிடமாவது பணத்தை திருடி, அதை செலவு செய்வதை வழக்கமாக கொண்டவர் என்பதும் தெரியவந்தது. ஊர், ஊராக தனிநபராக செல்வதால், அவரை ஏதோ பிச்சைக்காரன் என நினைத்து விட்டுவிடுவார்களாம். தற்போது, பணம் ஜேப்படி செய்தபோது கையும் களவுமாக சிக்கி கொண்டார்.

கைதான கிருஷ்ணப்பாவை போலீசார் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Next Story