திருப்பூர், காங்கேயம், தாராபுரம் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை


திருப்பூர், காங்கேயம், தாராபுரம் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை
x
தினத்தந்தி 13 May 2018 3:15 AM IST (Updated: 13 May 2018 1:35 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர், காங்கேயம், தாராபுரம் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

திருப்பூர்,

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பல இடங்களில் பெய்து வரும் பலத்த மழையால் நீர் நிலைகள் நிரம்பி வழிகிறது.

இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட திருப்பூர், காங்கேயம், தாராபுரம் உள்பட பல பகுதிகளில் நேற்று இரவு சுமார் 1 மணி நேரம் மழை பெய்தது. பலத்த காற்றுடன் பெய்த மழையால் திருப்பூர் மாநகருக்குட்பட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் அதிக அளவு தேங்கி நின்றது.

திருப்பூரின் முக்கிய சாலைகளான குமரன் ரோடு, மாநகராட்சி ரோடு, பார்க் ரோடு, புஷ்பாரவுண்டானா பகுதி, ஊத்துக்குளி முதல் ரெயில்வே கேட் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் அதிக அளவு தேங்கியது. அந்த பகுதியில் உள்ள ஒருசில வீடுகளிலும் மழைநீர் புகுந்தது.

சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் மெதுவாக சென்றன. இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருப்பூர் அவினாசி ரோட்டில் உள்ள கலெக்டர் முகாம் அலுவலகத்தில் ஒரு மரம் முறிந்து விழுந்தது.

ஆலங்காடு பகுதியில் ஒரு வீட்டின் அருகே நின்ற மரம் வீட்டின் முன்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது முறிந்து விழுந்ததில் கார் முற்றிலும் சேதம் அடைந்தது. சுற்றுச்சுவரும் இடிந்து விழுந்தது. அந்த பகுதியில் ஒரு மின்கம்பமும் சாய்ந்து விழுந்தது.

திருப்பூர் மட்டுமின்றி அனுப்பர்பாளையம், நல்லூர், மங்கலம், வீரபாண்டி உள்பட பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. பலத்த இடியுடன் மழை பெய்ததால் மங்கலம் பகுதிக்குட்பட்ட நடுவேலம்பாளையம் பள்ளிபாளையம்–பல்லடம் ரோட்டில் 2 மின்கம்பங்களும், சின்னாண்டிபாளையம் பகுதியில் 2 மின்கம்பங்களும், பள்ளப்பாளையம் பகுதியிலும் 2 மின்கம்பங்களும், மரமும் சாய்ந்து ரோட்டில் விழுந்தன.

அதே பகுதியில் சாலை விரிவாக்க பணிகளுக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் கார் ஒன்று விழுந்தது. இதனால் சின்னாண்டிபாளையம் வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. இதனால் ரோடுகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை பல மணி நேரம் நிறுத்தி வைத்ததால் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ரோட்டில் கிடந்த மரங்களை அகற்றினார்கள். மேலும், கம்பங்களை சரி செய்தனர். இதனால் நேற்று இரவு முழுவதும் மின் வினியோகம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.

புதிய பஸ்நிலையத்தில் இருந்து பிச்சம்பாளையம் வரை பெருமாநல்லூர் ரோட்டில் தண்ணீர் குளம்போல தேங்கி நின்றது. இதனால் வாகனங்கள் மெதுவாக சென்றது. கொங்கு மெயின் ரோட்டில் 2 பெரிய மரங்கள் முறிந்து விழுந்ததால் அந்த பகுதி வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குமார்நகர் எஸ்.ஏ.பி. பஸ்நிறுத்தம் அருகே உள்ள கடைகளின் விளம்பர பலகைகள் காற்றில் அடித்து செல்லப்பட்டன.

இதுபோல பல்லடம், அவினாசி, தாராபுரம், காங்கேயம், குண்டடம், சுற்றுவட்டார பகுதியில் நேற்று பகல் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்தது. தொடர்ந்து சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தாராபுரம் மற்றும் காங்கேயத்திற்குட்பட்ட பல பகுதிகளிலும் மின்கம்பங்கள் மரங்கள் முறிந்து விழுந்தன. மின்சாரமும் தடைபட்டது. தொடர்ந்து ஒரு மணி நேரம் பெய்த கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Next Story