தூத்துக்குடியில் பசுமை பூங்கா பணிகள் 6 மாதத்தில் நிறைவு பெறும் மாநகராட்சி ஆணையாளர் தகவல்


தூத்துக்குடியில் பசுமை பூங்கா பணிகள் 6 மாதத்தில் நிறைவு பெறும் மாநகராட்சி ஆணையாளர் தகவல்
x
தினத்தந்தி 13 May 2018 2:15 AM IST (Updated: 13 May 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பசுமை பூங்கா பணிகள் 6 மாதத்தில் நிறைவு பெறும் என்று மாநகராட்சி ஆணையாளர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் பசுமை பூங்கா பணிகள் 6 மாதத்தில் நிறைவு பெறும் என்று மாநகராட்சி ஆணையாளர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;–

பக்கிள் ஓடை 

தூத்துக்குடி மாநகர பகுதியில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள், தனியார் தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள் போன்றவற்றில் இருந்து வெளியாகும் கழிவு நீர், மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பக்கிள் ஓடை வழியாக கடற்கரையில் சென்றடைகிறது. இந்த பக்கிள் ஓடையானது, இந்திய உணவு கழக குடோன் முதல் திரேஸ்புரம் வரை 7½ கிலோ மீட்டர் நீளம் கொண்டதாகும்.

இந்த பக்கிள் ஓடையினை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்து சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பினை மையமாகக் கொண்டு, பக்கிள் ஓடையின் இருபுறமும் கம்பி வலைகள் அமைக்கப்பட்டு நடைபாதைகள், இந்திய உணவு கழக குடோன் முதல் திரேஸ்புரம் கடற்கரை வரை பக்கிள் ஓடையின் இருபுறமும் சாலைகள், இருக்கை வசதிகள், மரங்கள், பூஞ்செடிகள், மின் விளக்குகள் மற்றும் இடவசதி உள்ள இடங்களில் சிறுவர் பூங்காக்கள் ஆகியவை அமைத்து பசுமை பூங்காவாக மாற்றப்பட உள்ளது.

மேலும் பக்கிள் ஓடைக்கு வரும் கழிவுநீரை நேரடியாக கடலில் கலப்பதை தவிர்க்கும் விதமாக அந்த கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து கடலில் கலக்கும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது.

6 மாதத்தில் நிறைவு 

இந்த திட்டத்தை செயலாற்ற சென்னையை சேர்ந்த தகுதி வாய்ந்த ஒரு நிறுவனத்துக்கு வேலை உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது. கழிவுநீர் செல்லும் பகுதியினை நவீன முறையில் சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் பொதுமக்கள் நலன் கருதி பசுமை பூங்காவாக உருவாக்குவதற்கான முதற்கட்ட ஆயத்த பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து உரிய வழிமுறையாக பணிகள் ஆரம்பிக்கப்பட்ட 6 மாதத்துக்குள் நிறைவு செய்யப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 


Next Story