கலெக்டர் அலுவலகத்தில் கவர்னர் உருவபொம்மை எரிப்பு விவகாரம்: ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர்கள் 2 பேர் பணி இடைநீக்கம்
காரைக்கால் கலெக்டர் அலுவலகத்தில் கவர்னர் உருவபொம்மை எரிக்கப்பட்ட விவகாரத்தில் ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர்கள் 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி,
காரைக்கால் பகுதி மக்களுக்கு மாதாந்திர இலவச அரிசியை உடனே வழங்க வலியுறுத்தியும், இதற்கு முட்டுக்கட்டையாக உள்ள கவர்னர் கிரண்பெடியை கண்டித்தும் காரைக்கால் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் கடந்த 4–ந் தேதி ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
அப்போது அவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கவர்னர் கிரண்பெடியின் உருவபொம்மையை தீவைத்து எரித்தனர். காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவகலத்திற்குள் அத்துமீறி நுழைந்து அலுவலக நாற்காலிகளை தூக்கி வீசி ரகளையிலும் ஈடுபட்டனர். அப்போது அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து ரகளையில் ஈடுபட்டது, கவர்னர் உருவபொம்மையை கொடுத்தியது தொடர்பாக காரைக்கால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விவகாரத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர்கள் ராஜேஷ், சிவராஜ் ஆகியோர் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக அவர்கள் 2 பேரையும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா பணி இடைநீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டார்.