‘ஸ்மார்ட் பாகூர்’ திட்டம் தொடர்பாக பொது மக்கள் கூறும் கருத்துகளின் மீது உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுங்கள், அதிகாரிகளுக்கு கவர்னர் உத்தரவு


‘ஸ்மார்ட் பாகூர்’ திட்டம் தொடர்பாக பொது மக்கள் கூறும் கருத்துகளின் மீது உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுங்கள், அதிகாரிகளுக்கு கவர்னர் உத்தரவு
x
தினத்தந்தி 13 May 2018 5:00 AM IST (Updated: 13 May 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

‘ஸ்மார்ட் பாகூர்’ திட்டம் தொடர்பாக பொது மக்கள் கூறும் கருத்துகளின் மீது உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டார்.

பாகூர்,

பாகூரில் சுமார் 1,400 ஆண்டுகள் பழமைவாய்ந்த வேதாம்பிகை சமேத மூல நாதர் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த சிவன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலுக்கு சொந்தமாக 3 தீர்த்த குளங்கள் உள்ளன. அந்த குளங்கள் உரிய முறையில் பராமரிப்பு இல்லாமலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குப்பைகள் கொட்டும் இடமாகவும், கழிவு நீர் குளமாக மாறிவிட்டது.

மேலும் தீர்த்தக்குளத்துக்கு நீர்வரத்து வழிகளும் தூர்ந்துபோனதால், தண்ணீர் வருவதற்கும் வழியில்லாமல் போனது. எனவே இந்த குளங்களை தூர்வாரி மீண்டும் கோவிலின் பராமரிப்பில் கொண்டுவர வேண்டும் என பக்தர்களும், பொது மக்களும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், கவர்னர் கிரண்பெடி நேற்று பாகூர் வந்தார். இங்கு மூலநாதர் கோவிலுக்கு சொந்தமான குளங்களை பார்வையிட்டார். அப்போது குளங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக ரூர்பன் திட்டத்தின் மூலம் குளங்களை தூர்வாரி தடுப்பு அரண்கள் அமைத்து பராமரித்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் பாகூர் மூலநாதர் சாமி கோவிலுக்கு சென்ற கவர்னர் கிரண்பெடி சாமி தரிசனம் செய்தார். அவருக்கு அறங்காவலர் குழு சார்பில் பூரணகும்ப மரியாதை செலுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து, கோவில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் கூட்டத்தில் கவர்னர் கலந்துகொண்டு ரூர்பன் திட்டத்தின் கீழ் பாகூரில் செயல்படுத்தப்பட உள்ள பொலிவுறு கிராமம் (‘ஸ்மார்ட் வில்லேஜ்’) திட்டம் தொடர்பாக பொது மக்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி கருத்துகளை கேட்டறிந்தார்.

இந்த கூட்டத்தில் பேசிய ஊரக வளர்ச்சி துறை துணை திட்ட இயக்குனர் ருத்ரகவுடு இத்திட்டத்தின் கீழ் பாகூரில் ஸ்மார்ட் பள்ளி, குப்பை மேலாண்மை, பால் குளிரூட்டும் மையம் போன்ற வேலைவாய்ப்பு திட்டங்களை செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தார். பொதுப் பணித்துறை நீர்பாசன பிரிவு செயற்பொறியாளர் தாமரை புகழேந்தி பேசுகையில் தென்பெண்னையாற்றின் குறுக்கே மணமேடு, சோரியாங்குப்பம் பகுதியில் தடுப்பணைகள் கட்டப்பட உள்ளதாக தெரிவித்தார். இதுபோல், ஒவ்வொரு துறை அதிகாரிகளும் தங்களின் திடங்களை தெரிவித்தனர்.

அப்போது, கவர்னர் கிரண்பெடி பேசுகையில் “பாகூரில் ரூர்பன் திட்டத்தின் மூலம் ஸ்மார்ட் வில்லேஜ் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு, இப்பகுதி மக்களின் ஒத்துழைப்பும், ஆலோசனைகளும் தேவை. ‘ஸ்மார்ட் பாகூர்‘ என்ற பெயரில் வாஸ்ட்-அப் குழு உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி துறை இயக்குனர் மலர்கண்ணன் தலைமையில் ‘ஸ்மார்ட் பாகூர்‘ திட்டத்தில், பொதுப்பணித்துறை, வருவாய் துறை, சுற்றுச்சூழல் துறை, ஊரக வளர்ச்சி துறை, மின் துறை உள்ளிட்ட 15 துறை அதிகாரிகளும், ஏரி சங்கம், தொண்டு நிறுவனங்கள், பல்வேறு சமூக அமைப்புகள், கல்வியாளர்கள், பொது மக்கள் இக்குழுவில் இடம் பெறுவார்கள். பொது மக்கள் கூறும் கருத்துகளின் மீது அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாரம் ஒரு முறை இக்குழுவினர், கோவிலில் கூடி ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். கவர்னர் மாளிகை அதிகாரிகள் மாதம் ஒருமுறை நேரடியாக இத்திட்டம் தொடர்பான பணிகளை கவனிப்பார்கள் என்றார்.

கவர்னரின் ஆய்வின்போது, துணை மாவட்ட ஆட்சியர் உதயக்குமார், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் சண்முகசுந்தரம், தாசில்தார் கார்த்திகேயன், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்திரராஜன், வனத்துறை, சுற்றுச்சூழல் துறை, மின் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story