மாவட்ட செய்திகள்

ஏற்றுமதி சிற்பங்களுக்கு மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலகத்திலேயே தடையில்லா சான்று சிற்பிகள் கோரிக்கை + "||" + Sculptors request

ஏற்றுமதி சிற்பங்களுக்கு மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலகத்திலேயே தடையில்லா சான்று சிற்பிகள் கோரிக்கை

ஏற்றுமதி சிற்பங்களுக்கு மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலகத்திலேயே தடையில்லா சான்று
சிற்பிகள் கோரிக்கை
ஏற்றுமதி சிற்பங்களுக்கு மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலகத்திலேயே தடையில்லா சான்று வழங்க வேண்டும் என்று சிற்பிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்கள் அங்கு கடற்கரை கோவில், ஐந்துரதம் உள்ளிட்ட குடைவரை கோவில்களை உருவாக்கினர். தற்போது பல்லவ மன்னர்களின் சிற்பக்கலையை பின்பற்றி மாமல்லபுரத்தில் 300-க்கும் மேற்பட்ட சிற்பக்கலைக்கூடங்கள் இயங்கி வருகின்றன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிற்பிகள் கல்சிற்பம் வடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு வடிக்கப்படும் சிற்பங்கள் உள்நாடு மட்டுமின்றி அமெரிக்கா, சிங்கப்பூர், இலங்கை, மலேசியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் உள்ள கோவில்கள், பண்ணை வீடுகள், பூங்காக்கள் போன்றவற்றில் நிறுவுவதற்காக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

சிலைகள் ஏற்றுமதியால் நம்நாட்டிற்கு அந்நிய செலாவணி அதிக அளவில் ஈட்டித்தரும் நிலையில் புதிய சிலைகள் ஏற்றுமதியில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களால் சிற்பிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

தென் மாநிலங்களில் குறிப்பாக மாமல்லபுரம் நகரமே ஏற்றுமதி சிற்பங்களில் முதன்மை வகிக்கும் நகரமாக திகழ்கிறது. வெளிநாட்டிற்கு அனுப்பும் சிலைக்கு பழங்கால பாரம்பரிய சிலைகள் அல்ல என தடையில்லா சான்று பெற்றிருந்தால் மட்டுமே சிலைகளை கப்பல் மூலம் ஏற்றுமதி செய்ய சுங்கத்துறை அனுமதி அளிக்கும். இத்தகைய சான்றுகளை 2010-ம் ஆண்டு வரை கைவினை பொருட்கள் வாரியம் வழங்கியது. இந்த சான்று பெற்ற சிலைகளை மட்டுமே வெளிநாடுகளுக்கு அனுப்ப இயலும் என்பது குறித்து முக்கிய விதிமுறை வகுக்கப்பட்டது.

தடையில்லா சான்று

தற்போது தமிழக கோவில்களின் பழங்கால அரிய சிலைகளை வெளிநாடுகளுக்கு கடத்துவது அதிகரித்து வரும் சூழலில் ஏற்றுமதி சிற்பங்களுக்கு தடையில்லா சான்றுகள் வழங்க மத்திய தொல்லியல் துறை பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. சென்னை வட்ட தொல்லியல் கண்காணிப்பாளர் தலைமையிலான தொல்லியல் அலுவலர்கள் குழு மாதத்தில் ஒரு நாள் மட்டுமே செனனை கோட்டையில் உள்ள அலுவலகத்தில் கூடுவார்கள்.

அப்போது, ஏற்றுமதி சிற்பங்களுக்கான விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலிப்பார்கள். அப்போது மாமல்லபுரத்தில் வடிக்கப்படும் சிற்பங்களை ஒரே நாளில் லாரி மூலம் கொண்டு வந்து ஆய்வுக்கு அழைக்கும் வரை பலமணி நேரம் திறந்த வெளியில் சிற்பங்களை வைத்து காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது.

கோரிக்கை

மீண்டும் மாமல்லபுரத்திற்கு கனரக வாகனத்தில் சிற்பங்களை எடுத்துவரும் போது சிலைகள் சேதம் அடைகின்றன. மேலும் இதனால் வெளிநாட்டுக்கு குறிப்பிட்ட நாட்களில் சிலைகளை அனுப்ப முடியாமலும். கும்பாபிஷேகம் நடத்துவதில் காலதாமதம் ஏற்படுவதாலும் சிற்பிகள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்படுகிறது.

எனவே சிற்பங்கள் சேதம் அடையாமல் இருக்கவும், காலவிரயத்தை தவிர்க்கவும் மாமல்லபுரத்தில் வடிக்கப்படும் ஏற்றுமதி சிற்பங்களுக்கு மாமல்லபுரம் தொல்லியல் துறை அலுவலகத்திலேயே தடையில்லா சான்று வழங்க வேண்டும் என்று சிற்பிகள் மத்திய தொல்லியல் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.