கர்நாடக சட்டசபை தேர்தல்: மைசூருவில் அமைதியான ஓட்டுப்பதிவு அதிகபட்சமாக பிரியப்பட்டணாவில் 81 சதவீதம் வாக்கு பதிவானது
கர்நாடக சட்டசபை தேர்தலில் மைசூருவில் அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் அதிகபட்சமாக பிரியப்பட்டணாவில் 81 சதவீதம் வாக்கு பதிவானது.
மைசூரு,
கர்நாடக சட்டசபை தேர்தலில் மைசூருவில் அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் அதிகபட்சமாக பிரியப்பட்டணாவில் 81 சதவீதம் வாக்கு பதிவானது.
சட்டசபை தேர்தல்
கர்நாடக சட்டசபைக்கு நேற்று தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் மைசூரு மாவட்டத்தில் நேற்று அமைதியான முறையில் ஓட்டுப்பதிவு நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய ஓட்டுப்பதிவு, மாலை 6 மணி வரை நடந்தது. மைசூரு மாவட்டத்தில் மொத்தம் 11 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் மைசூரு நகரை தவிர மற்ற பகுதிகளில் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
மைசூரு நகரில் உள்ள வாக்குச்சாவடிகள் பெரும்பாலானவை வெறிச்சோடியே காணப்பட்டது. இதன்காரணமாக மற்ற பகுதிகளை காட்டிலும் மைசூரு நகரில் வாக்குப்பதிவு சதவீதம் வெகுவாக குறைந்திருந்தது. மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகள் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பெண்களுக்காக ‘பிங்க்’ வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
வாக்குப்பதிவு தாமதம்
கிருஷ்ணராஜா தொகுதிக்குட்பட்ட பகுதியில் அரண்மனை பின்புறம் உள்ள சமஸ்கிருத பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில், வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே வாக்கு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் 40 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது. பின்னர் அந்த கோளாறு சரி செய்யப்பட்டு காலை 7.40 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள்.
மைசூருவில் ஒருசில இடங்களில் வாக்காளர்கள் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் வைத்திருந்தாலும், வாக்காளர்கள் பட்டியலில் பெயர் இல்லாததால் சிலர் வாக்களிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் வாக்குச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அவர்கள் ஓட்டுப்போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
சித்தராமையா ஓட்டு போட்டார்
மைசூரு மாவட்டத்தில் மாலை 5 மணி நிலவரப்படி 65.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. இதில் அதிகபட்சமாக பிரியப்பட்டணா தொகுதியில் 81.20 சதவீதமும், குறைந்தபட்சமாக நரசிம்மராஜா தொகுதியில் 46.84 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தன.
முதல்-மந்திரி சித்தராமையா நேற்று மதியம் 1 மணிக்கு வருணா தொகுதியில் உள்ள தனது சொந்த கிராமமான சித்தராமனஉண்டிக்கு குடும்பத்தினருடன் சென்றார். அங்கு உள்ள சித்தராமேஸ்வரர் கோவிலில் சித்தராமையா குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அந்தப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது மனைவி பார்வதி, மகன் யதீந்திரா ஆகியோருடன் சென்று வாக்களித்தார். பின்னர் சித்தராமனஉண்டி கிராமத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்தார். அப்போது சித்தராமையா தனது உறவினர்கள், நண்பர்களுடன் பேசி மகிழ்ந்தார்.
இளவரசர் யதுவீர்
இதேபோல, மைசூரு இளவரசர் யதுவீர், மகாராணி பிரமோதா தேவி ஆகியோர் கிருஷ்ணராஜா தொகுதிக்குட்பட்ட கில்லேமொகல்லாவில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த 148-வது எண் வாக்குச்சாவடியில் சுமார் அரை மணிநேரம் வரிசையில் காத்து நின்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
மேலும் சுத்தூர் மடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திரசுவாமி, கிருஷ்ணராஜா தொகுதிக்குட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இதேபோல, முதல் தலைமுறை வாக்காளர்களுக்கும் ஆர்வத்துடன் வந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.
Related Tags :
Next Story