கொடைக்கானல் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பெண் பலி: மற்றொருவர் கதி என்ன?


கொடைக்கானல் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி பெண் பலி: மற்றொருவர் கதி என்ன?
x
தினத்தந்தி 13 May 2018 4:30 AM IST (Updated: 13 May 2018 3:36 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் அருகே காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கி பெண் பலியானார். மற்றொரு பெண் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

பெரும்பாறை,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள பண்ணைக்காடு ஆலடிப்பட்டியை சேர்ந்த ஆண்டவர் என்பவரின் மனைவி ஜெயலட்சுமி (வயது 55). இவர்களது மகன் விஜயராகவன் (30). இதே பகுதியை சேர்ந்தவர் சேதுராமன் (45). இவரது மகள் வைஸ்ணவி (16). தேனி கண்டமனூரை சேர்ந்த சேர்மலை மனைவி திவ்யா (25). பண்ணைக்காடு ஆலடிப்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு திவ்யா வந்திருந்தார். நேற்று ஜெயலட்சுமி, விஜயராகவன், சேதுராமன், வைஸ்ணவி ஆகியோருடன் திவ்யா அருகே உள்ள காபி தோட்டத்திற்கு கூலி வேலைக்கு சென்றார்.

இந்தநிலையில் மூலையாறு, வடகரைபாறை, ஊத்து, பண்ணைக்காடு ஆகிய பகுதியில் நேற்று பிற்பகல் 3 மணியில் இருந்து மாலை 5 மணிவரை பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது கூலி வேலைக்கு சென்ற இவர்கள் 5 பேரும் மாலை 4.30 மணிக்கு வேலையை முடித்து விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தனர்.

வழியில் மூலையாறு தால்லோடை காட்டாற்றை கடந்தனர். இதில் சேதுராமன், வைஸ்ணவி, விஜயராகவன் ஆகிய மூன்று பேரும் ஆற்றில் முன்னால் கடந்து சென்றனர். திவ்யா, ஜெயலட்சுமி ஆகியோர் அவர்களுக்கு பின்னால் வந்தனர். அப்போது வேகமாக வந்த காட்டாற்று வெள்ளம் திவ்யாவை இழுத்து சென்றது. எனவே திவ்யாவை ஜெயலட்சுமி காப்பாற்ற முயன்றார். அப்போது ஜெயலட்சுமியையும் தண்ணீர் இழுத்து சென்றது. அவர்கள் 2 பேரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து தேடினர். இதில் காட்டாற்று வெள்ளத்தில் மூழ்கி ஜெயலட்சுமி இறந்த நிலையில் மீட்கப்பட்டார். வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட திவ்யாவை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவரது கதி என்ன? என்று தெரியவில்லை.

பின்னர் இதுகுறித்து கொடைக்கானல் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து திவ்யாவை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பாக தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திவ்யாவுக்கு நிவேஷ் (6) சிவகார்த்திக் (2) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story