மாவட்ட செய்திகள்

பழனி முருகன் கோவிலுக்கு புதிய சிலை செய்ததில் மோசடி: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தகவல் + "||" + Fraud is a new statue for the temple of Palani Murugan

பழனி முருகன் கோவிலுக்கு புதிய சிலை செய்ததில் மோசடி: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தகவல்

பழனி முருகன் கோவிலுக்கு புதிய சிலை செய்ததில் மோசடி: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தகவல்
பழனி முருகன் கோவிலுக்கு புதிய சிலை செய்ததில் நடந்த மோசடி வழக்கில் 13-ம் நூற்றாண்டில் இருந்து தற்போது வரை கோவிலில் பராமரிக்கப்படும் ஆவணங்களை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.
பழனி, 

முருகப்பெருமானின் 3-ம் படை வீடாக பழனி முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் மூலவர் சன்னதியில் போகர் என்னும் சித்தரால் நவபாஷாணம் மூலம் உருவாக்கப்பட்ட முருகப்பெருமான் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை சேதமடைவதாக கூறப்பட்டதையடுத்து நவபாஷாண சிலைக்கு பதிலாக புதிதாக ஐம்பொன் சிலை செய்து, அதனை மூலவர் சிலைக்கு முன்பு வைக்க இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது.

இந்த சிலையை ஸ்தபதி முத்தையா தலைமையிலான குழுவினர் உருவாக்கினர். பின்னர் இந்த சிலை, மூலவர் சன்னதியில் உள்ள நவபாஷாண சிலைக்கு முன்பு வைக்கப்பட்டு பூஜைகளும் நடத்தப்பட்டது. சிலை வைக்கப்பட்டு அபிஷேகங்கள் செய்யப்பட்ட சில மாதங்களிலேயே அதன் நிறம் மாற தொடங்கியது. மேலும் பக்தர்களும் நவபாஷாண சிலையை மறைத்து புதிய சிலை வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கடந்த 2004-ம் ஆண்டு கருவறையில் இருந்து ஐம்பொன் சிலை அகற்றப்பட்டது.

இந்த நிலையில் புதிதாக முருகன் சிலை செய்ததில் மோசடி நடந்திருப்பதாக எழுந்த புகாரையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் பழனி கோவில் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது சிலை செய்ததில் மோசடி நடந்திருப்பதும், நவபாஷாண சிலையை வெளிநாட்டுக்கு கடத்தி செல்ல சிலர் முடிவு செய்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஸ்தபதி முத்தையா, அப்போது பழனி முருகன் கோவில் இணை ஆணையராக இருந்த கே.கே.ராஜா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு தமிழக அரசால் மாற்றப்பட்டது. இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரணை செய்த ஐகோர்ட்டு மீண்டும் இந்த வழக்கை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரிக்க உத்தரவிட்டது.

இதையடுத்து ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் சிலை மோசடி வழக்கில் மீண்டும் சாட்டையை சுழற்றியுள்ளார். அவர் தலைமையிலான குழுவினர் நேற்று பழனிக்கு வந்தனர்.

அவர்களுடன் சென்னை ஐ.ஐ.டி.யில் உலோகவியல் துறை பேராசிரியரான முருகைய்யா தலைமையிலான குழுவினரும் வந்தனர். அவர்கள் பழனி பாலாறு இல்லத்தில் தங்கினர். பின்னர் காலை 10 மணியளவில் பேராசிரியர் முருகைய்யா தலைமையிலான குழுவினர் மலைக்கோவிலுக்கு சென்று ஐம்பொன் சிலையை ஆய்வு செய்தனர்.

அப்போது, சிலையில் என்னென்ன உலோகங்கள் கலக் கப்பட்டுள்ளன, எந்த விகிதத்தில் கலக்கப்பட்டுள்ளது, சிலை நிறம் மாறியதற்கான காரணம் என்ன? என்பது போன்ற பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறியதாவது:-

மலைக்கோவில் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள ஐம்பொன் சிலையை சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களின் பரிந்துரைப்படி அடுத்தக்கட்ட நடவடிக்கையை எடுப்போம். பழனி முருகன் கோவிலில் 13-ம் நூற்றாண்டில் இருந்து தற்போது வரை பராமரிக்கப்படும் ஆவணங்களை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் கோவில் இணை ஆணையர் உள்பட அனைத்து அலுவலர்களிடமும் விசாரணை நடத்தி உள்ளோம். மேலும் இந்த வழக்கு தொடர்பாக மேலும் 3 பேரிடம் விசாரிக்க உள்ளோம். அதில் அவர்கள் குற்றம் செய்தது நிரூபணமானால் அவர்களும் கைது செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது. இதுதவிர மலைக்கோவில் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவில்களில் உள்ள உற்சவர் சிலைகள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. விசாரணை நாளையும் (அதாவது இன்று) நடக்கிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.