மாவட்ட செய்திகள்

அவுரங்காபாத்தில் இருதரப்பினர் இடையே பயங்கர மோதல்வன்முறையில் 2 பேர் பலி; 40 பேர் காயம் + "||" + The terrible conflict between the two sides 2 killed in violence 40 people were injured

அவுரங்காபாத்தில் இருதரப்பினர் இடையே பயங்கர மோதல்வன்முறையில் 2 பேர் பலி; 40 பேர் காயம்

அவுரங்காபாத்தில் இருதரப்பினர் இடையே பயங்கர மோதல்வன்முறையில் 2 பேர் பலி; 40 பேர் காயம்
அவுரங்காபாத்தில் இருதரப்பினர் மோதல் காரணமாக பயங்கர வன்முறை உண்டானது. இதில் 2 பேர் பலியானார்கள்.போலீசார் உள்பட40 பேர் காயம் அடைந்தனர்.
அவுரங்காபாத்,

அவுரங்காபாத்தில் இருதரப்பினர் மோதல் காரணமாக பயங்கர வன்முறை உண்டானது. இதில் 2 பேர் பலியானார்கள்.போலீசார் உள்பட40 பேர் காயம் அடைந்தனர்.

குடிநீர் இணைப்பு துண்டிப்பு

அவுரங்காபாத் நகரில் இருக்கும் மோதிகராஞ்சா என்ற இடத்தில் உள்ள ஒரு வழிபாட்டு தலத்திற்கு சட்டவிரோதமாக கொடுக்கப்பட்ட குடிநீர் இணைப்பை நேற்றுமுன்தினம் அவுரங்காபாத் மாநகராட்சியினர் துண்டித்தனர். அருகில் உள்ள காந்தி நகரை சேர்ந்த மற்றொரு தரப்பினரின் தூண்டுதலின் பேரில் தான் மாநகராட்சியினர் நடவடிக்கை எடுத்து உள்ளதாக மோதிகராஞ்சா பகுதியை சேர்ந்தவர்கள் கருதினர்.

இதையடுத்து, அவர்கள் காந்தி நகரில் உள்ள வழிபாட்டு தலத்திற்கு கொடுக்கப்பட்டு உள்ள குடிநீர் இணைப்பும் சட்டவிரோதமானது தான், அதையும் துண்டிக்க வேண்டும் என நேற்றுமுன்தினம் இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பயங்கர வன்முறை

இதற்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, இருதரப்பினர் இடையே திடீரென கடும் மோதல் உண்டானது. இந்த மோதல் பயங்கர வன்முறையாக மாறியது. இருதரப்பினரும் சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். வாள், கத்தி, உருட்டு கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களாலும் தாக்கி கொண்டனர்.

வாகனங்கள் மற்றும் கடைகள் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்டன. வன்முறையில் ஈடுபட்டவர்கள் பல கடைகளுக்கு தீ வைத்தனர். இதனால் கடைகள் கொழுந்து விட்டு எரிந்தன. அந்த பகுதியே போர்க்களம் போல் மாறியது. நகரம் முழுவதும் பெரும் பதற்றம் உண்டானது.

2 பேர் பலி

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வாகனங்களில் விரைந்து வந்தனர். வன்முறையாளர்களை விரட்டுவதற்காக கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் போலீசார் மீதும் கற்களை வீசி தாக்கினார்கள். போலீஸ் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன.

இருப்பினும் போலீசார் வன்முறையாளர்களை விரட்டியடித்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதே நேரத்தில் இந்த திடீர் வன்முறையில் 2 பேர் பலியானார்கள். தனது கடையில் தூங்கி கொண்டிருந்த ஜகன்லால் பன்சிலே (வயது62) என்பவர் வன்முறையாளர்கள் அவரது கடையில் வைத்த தீயில் உடல் கருகியும், வன்முறையின் போது படுகாயம் அடைந்த அப்துல் ஹரூண் ஹடாரி (17) என்ற வாலிபர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றியும் உயிரிழந்தனர்.

40 பேர் காயம்

மேலும் 10 போலீஸ் அதிகாரிகள் உள்பட 40 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து அவுரங்காபாத் நகர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வன்முறை தொடர்பாக வதந்திகள் பரவுவதை தடுக்க இரண்டு நாட்களுக்கு செல்போன் மற்றும் இணைய சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அவுரங்காபாத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் நகர் முழுவதும் பாதுகாப்புக்காக போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

வன்முறை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.