பள்ளி திறக்கும் முன்பு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்திருக்க வேண்டும் முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தல்


பள்ளி திறக்கும் முன்பு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்திருக்க வேண்டும் முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 12 May 2018 10:44 PM GMT (Updated: 12 May 2018 10:44 PM GMT)

பள்ளி திறக்கும் முன்பு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்திருக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களிடம் முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் கூறினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் அனைத்து அரசு, நகராட்சி, நிதியுதவி, சுயநிதி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் ஆலோசனை கூட்டம் நடந்தது.

முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தலைமை தாங்கி பேசியதாவது-

2018-2019-ம் ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கு தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இணைந்து செயல்பட வேண்டும். பள்ளியில் உள்ள வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலக வசதி, ஸ்மார்ட் வகுப்பறைகள், கணினி வசதி, விளையாட்டு மைதானம், கழிவறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகள் இருப்பதைத் தெரிவித்தும், தங்களது பள்ளி அமைந்துள்ள கிராமம், அருகில் உள்ள கிராமங்களில் விளம்பரம் செய்தும், அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி செயல்படுவது, புதிய பாடப்பிரிவு தொடக்கம் ஆகியவை குறித்து பெற்றோருக்குத் தெரியப் படுத்த வேண்டும்.

ஒரு பள்ளியின் முழு நிர்வாகமும் தலைமை ஆசிரியரிடம் இருப்பதால் மாணவர்களின் தேர்ச்சி இலக்கைக் குறிக்கோளாகக் கொண்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ் -2 வகுப்பு மாணவ- மாணவிகள் 100 சதவீத தேர்ச்சி இலக்கை அடைய தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் தங்களின் ஆலோசனைகளை தெரிவிக்கலாம்.

அடிப்படை வசதிகள்

பள்ளியின் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு, மாணவர்களின் சேர்க்கை, வருகை, உள்கட்டமைப்பு, தேர்ச்சி ஆகியவற்றை குறிக்கோளாக வைத்து பெற்றோர் ஆசிரியர் கழகம் பள்ளிகளில் சிறப்பாக செயல்பட வேண்டும்.

வரும் கல்வியாண்டில் இயற்கையுடன் இணைந்த வாழ்வு, பாரம்பரிய, சத்தான உணவை உண்ணும் பழக்கம், உடற்பயிற்சி, மருத்துவ பரிசோதனை, உடல் தகுதி ஆகியவை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பள்ளிகள் திறக்கும் ஒரு வாரத்திற்கு முன்பு தலைமை ஆசிரியர்கள் முன்னேற்பாடு பணிகளை செய்ய வேண்டும். பள்ளி வளாகம், வகுப்பறைகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும். கரும்பலகைகள் வண்ணம் தீட்டப்பட்டிருக்க வேண்டும். கழிவறைகள் போதுமான எண்ணிக்கையில் தூய்மையாக தண்ணீர் வசதியுடன் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தினுள் முட்புதர்கள் நீக்கப்பட வேண்டும். மின் இணைப்புகள் பழுதில்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சேதமடைந்த கட்டிடங்கள், இடியும் நிலையில் உள்ள அபாயகரமான சுவர்கள் அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் சேர்க்கைக்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். பாடப்புத்தகம், நோட்டு, சீருடைகள் முதலியவை குறித்து உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story