கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந் தேதி பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கமோதிரம் தி.மு.க. மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்


கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந் தேதி பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கமோதிரம் தி.மு.க. மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 12 May 2018 10:57 PM GMT (Updated: 12 May 2018 10:57 PM GMT)

கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந் தேதி பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்க தி.மு.க. மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் போடப்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டம் திருவண்ணாமலை திருக்கோவிலூர் ரோட்டில் உள்ள தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட அவைத் தலைவர் த.வேணுகோபால் தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.சிவானந்தம், தி.மு.க. தணிக்கைக்குழு உறுப்பினர் கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட அவைத்தலைவர் கே.ஆர்.சீத்தாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செயற்குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தெற்கு மாவட்ட செயலாளரான எ.வ.வேலு எம்.எல்.ஏ. விளக்கி பேசினார்.

முன்னதாக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தி.மு.க. தலைவர் கருணாநிதி சட்டமன்றத்தில் வைர விழா காணுவதோடு, அவருடைய 95 வது பிறந்த நாள் வருகிற ஜூன்3-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி அவரது பிறந்தநாள் விழாவை நமது மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடும் விதமாக பொதுக்கூட்டம், பட்டிமன்றம், பாட்டரங்கம், மாவட்டம் முழுவதும் உள்ள ஒவ்வொரு ஊராட்சிகளிலும் கழக கொடியேற்று நிகழ்வுகள் நடத்துவது, ஏழை எளிய மக்கள், மாணவ -மாணவியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, ஜூன் 3-ந் தேதி பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குவது, ‘நீட்’ தேர்வை எதிர்த்து வழக்கு மன்றத்தில் வாதாடாத தமிழக அரசை வன்மையாக கண்டிப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செயற்குழு கூட்டத்தில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ரா.ஸ்ரீதரன், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, கே.வி.சேகரன், எஸ்.அம்பேத்குமார், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர்கள் சி.சுந்தரபாண்டியன், பாரதிராமஜெயம், நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாநில தொ.மு.ச., பேரவைச் செயலாளர் க.சவுந்தரராசன், டாக்டர் எ.வ.வே.கம்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட துணை செயலாளர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன் நன்றி கூறினார். 

Next Story