மரம்.. மருத்துவம்..


மரம்.. மருத்துவம்..
x
தினத்தந்தி 13 May 2018 9:14 AM GMT (Updated: 13 May 2018 9:14 AM GMT)

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு டாக்டர்கள் குளுக்கோஸ் செலுத்த பரிந்துரைப்பார்கள்..

ஆலமரம் ஒன்றுக்கு அதே முறையை பின்பற்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  அந்த ஆலமரம் தெலுங்கானா மாநிலம் மஹபூப் நகர் மாவட்டத்திலுள்ள பில்லாளமாரி என்ற இடத்தில் உள்ளது.

உலகின் இரண்டாவது பெரிய ஆலமரம் என்ற சிறப்பை பெற்றுள்ள இது மூன்று ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து நிற்கிறது. இதன் வயது 700 ஆண்டு. அதனால் ஆலமரத்தின் பல பாகங்கள் சிதிலமடைய தொடங்கி இருக்கிறது. அதனை காப்பாற்றுவதற்காக வனத்துறை அதிகாரிகள் இத்தகைய மர சிகிச்சையை கையாண்டு இருக்கிறார்கள்.

இதுபற்றி வனத்துறை அதிகாரி சுக்க ரங்க ரெட்டி கூறுகையில், “இந்த ஆலமரத்தின் ஒரு பகுதி வேர்கள் மற்றும் தண்டு பகுதிகள் சிதைவடைந்துள்ளன. அதனால் மரம் அழிவை எதிர்கொண்டிருக்கிறது. அதனை காப்பாற்றுவதற்கு மூன்று வகையான வழிமுறைக்கு பரிந்துரைத்தோம். தண்டு பகுதிக்குள் துளையிட்டு ரசாயன கலவையை செலுத்தி வளர வைக்க முயற்சித்தோம். அது பலன் தரவில்லை. தற்போது குளுக்கோஸ் பாட்டில்களில் ரசாயனத்தை கலந்து அதன் மூலம் வேர்களை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதிகமான கிளைகளை கொண்டிருப்பதால் ஆங்காங்கே காங்கிரீட் கட்டமைப்புகளை உருவாக்கி மரத்தை வலுப்படுத்தி வருகிறோம்’’ என்கிறார்.

மரத்தின் கிளைப்பகுதிகளுக்கு உயிரோட்டம் கொடுப்பதற்காக 100-க்கும் மேற்பட்ட குளுக்கோஸ் பாட்டில்கள் தொங்கவிடப்பட்டுள்ளன. அதன் மூலம் மரத்துக்கு தேவையான மருந்துகளை செலுத்தி வருகிறார்கள். இந்த மரம் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதால் தற்போது சுற்றுலாப் பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. 

Next Story