மாவட்ட செய்திகள்

உஷாரய்யா உஷாரு.. + "||" + Usharayya Usharoo ..

உஷாரய்யா உஷாரு..

உஷாரய்யா உஷாரு..
அவர்கள் இருவரும் கல்லூரித் தோழிகள். ஒரே பகுதியில் வெவ்வேறு தெருக்களில் வசித்து வருகிறார்கள்.
இருவரும் தினமும் காலையில் வீட்டில் இருந்து கிளம்பி, பத்து நிமிடங்கள் நடந்து மெயின் ரோட்டிற்கு வந்து கல்லூரிப் பேருந்தில் ஏறுவார்கள்.

சில நாட்கள் வீட்டில் இருந்து கிளம்ப தாமதமாகி விடும். அப்போது வேகமாக நடந்து வந்து, தெருமுனையில் நிற்கும் ஆட்டோவில் ஏறி மெயின் ரோட்டிற்கு வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.


அவர்கள் சமீபத்தில் இரண்டு, மூன்று நாட்கள் தாமதமாக வந்தபோது முதியவரான ஆட்டோ டிரைவர் ஒருவர்தான் கண்ணில் பட்டார். அவர் பார்க்க பரிதாபமாக தென்பட்டார். ஆட்டோவும் அவரைப் போன்று பழையதாகி உடைந்தும், உள்ளே கிழிந்தும் காணப்பட்டது.

முதியவரை பார்க்க பரிதாபமாக இருந்ததால், புதியவராக தெரிந்தாலும் பேரம் பேசாமல் ஏறினார்கள். அவரும் மெயின் ரோட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு, ‘கொடுக்கிறதை கொடுங்க தாயீ..’ என்று, நீட்டியதை வாங்கிக் கொண்டார். ஆனால் அவர்கள் சவாரி செய்த மூன்று நாட்களில் இரண்டு நாட்கள் போகிறபோக்கில் முன்னாலும், ஓரத்திலும் சென்ற இதர வாகனங்கள் ஒருசிலவற்றின் மீது இவரது ஆட்டோ இடித்துக் கொண்டே போனது. பாதிக்கப்பட்டவர்கள் திட்டிக் கொண்டே அடிக்க பாயும்போது, ‘ஏதோ தெரியாமல் பண்ணிட்டேன்.. மன்னிச்சுடுங்க..’ என்று கையெடுத்து கும்பிடுவார். இந்த மாதிரியான சம்பவங்களால் தோழிகள் சில நாட்கள் கல்லூரி பேருந்தை தவறவிட்டிருந்தாலும், அவர் மீது அவர்களுக்கு பரிதாபம் உருவானது.

அன்று அவர்கள் வசித்த பகுதியில் இலவச மருத்துவ முகாம் ஒன்று நடந்தது. தோழிகள் இருவருக்கும் லீவு என்பதால் அந்த முதியவரை தேடிச் சென்றார்கள். அவரை கண்டுபிடித்து ‘உங்களுக்கு வயதாகி விட்டது. கண்ணாடி அணியாமல் ஆட்டோ ஓட்டுகிறீர்கள். உங்களுக்கு பார்வை சரியில்லாததுபோல் தெரிகிறது. எங்களோடு வாருங்கள். இலவச பரிேசாதனை முகாமுக்கு அழைத்துச் செல்கிறோம்’ என்றார்கள்.

அவருக்கு அந்த முகாமில் கலந்துகொண்டு பலன் பெற வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் தயங்கினார். மாணவி களிடம் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தடுமாறவும் செய்தார். அதை புரிந்து கொண்டவர்கள், ‘இது நல்ல வாய்ப்பு.. ஆனாலும் ஏன் பயன்படுத்திக்கொள்ள தயங்குகிறீர்கள்?’ என்று கேட்க, அவர் கண்கலங்கியபடி ‘மத்தியானத்திற்குள் நான் ஐநூறு ரூபாய்க்கு ஆட்டோ ஓட்டி என் மகள்கிட்டே கொண்டு போய் கொடுக்கணும். இதுவரை 100 ரூபாய்க்கு தான் ஆட்டோ ஓட்டியிருக்கேன்..’ என்று தயக்கத்திற்கான காரணம் சொன்னார்.

உடனே மாணவிகள், ‘ஆளுக்கு நூறு ரூபாய் தருகிறோம்... முகாமுக்கு வாருங்கள்..’ என்று அவரது ஆட்டோவிலே அழைத்துச் சென்றார்கள். அங்கு முதல் ஆளாக அவருக்கு பரிசோதனைகள் செய்ய ஏற்பாடு செய்தார்கள். பரிசோதனைகள் முடிந்ததும், மாணவிகள் 200 ரூபாய் கொடுத்தனர். அதை வாங்க மறுத்துவிட்டு அவர் தனது ஆட்டோவில் கிளம்பி போய்விட்டார்.

மாலையில் அவரது பரிசோதனை முடிவுகளை அறிந்த மாணவிகளுக்கு பெரும் கவலை. அவரது கண் பார்வை பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தது. சர்க்கரை நோய், கொழுப்பு பிரச்சினை, உயர் ரத்த அழுத்தம் போன்ற பல பாதிப்புகள் இருந்தன. பரிசோதனை முடிவோடு அந்த முதியவரை தேடிய மாணவிகளிடம் அவர் அகப்படவில்லை. அவர்களும் விடாப்பிடியாக அங்கும் இங்குமாக விசாரித்து அவர் வசிக்கும் வீட்டிற்கு போய்விட்டார்கள். அங்கும் அவர் இல்லை.

வீட்டில் அவரது மகள் இருந்தாள். அவளுக்கு மூன்று குழந்தைகள். கணவர் உள்ளே தூங்கிக் கொண்டிருந்தார். மாணவிகள், அவரது மகளிடம் தங்களை அறிமுகம் செய்து கொண்டு, பரிசோதனை முடிவுகளை கொடுத்ததும் அந்த பெண்ணின் முகம் இறுகியது. ‘இந்த வேலை எல்லாம் உங்களுக்கு எதுக்கு? என் அப்பாவை கவனிச்சுக்க எனக்கு தெரியாதா? பெரிய சமூக சேவை செய்யுறதா நினைப்போ..’ என்று திட்டி அனுப்பி விட்டாள். மாணவிகள் தலையை தொங்கப் போட்டுக்கொண்டு தப்பித்தால் போதும் என்று திரும்பி விட்டார்கள்.

கிராமத்தில் பிறந்து, திருமணமாகி பெருநகரத்திற்கு கணவரோடு வாழ வந்த பெண்களில் சிலர், தங்கள் கணவர் சரியானவராக அமையாததால், அவர் களது முதிய தந்தையை கிராமத்தில் இருந்து அழைத்துவந்து சில நாட்கள் பயிற்சிகொடுத்து, அங்கேயே ஒரு ஆட்டோவையும் ஏற்பாடு செய்துகொடுத்து ஓட்ட வைக்கிறார்கள். அவர்களது மன நிலையையும், உடல் நிலையையும் கருத்தி்ல்கொள்வதில்லை. தினசரி இத்தனை ரூபாய்க்கு ஆட்டோவை ஓட்டினால்தான் குழந்தைகளின் பசியை போக்க முடியும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். அப்படிப்பட்ட பரிதாப ஆட்டோ டிரைவர்களில் இந்த முதியவரும் ஒருவர்! இன்னும் எத்தனை பேர் வெளியே தெரியாமல் விம்மிக் கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை..!

- உஷாரு வரும். 


தொடர்புடைய செய்திகள்

1. உஷாரய்யா உஷாரு..
பக்கத்து மாநிலத்தை ஒரு புயலும், அதை தொடர்ந்து வந்த மழையும் புரட்டிப்போட்டு பெரும்சேதத்தை உருவாக்கியபோது, ஏராளமான மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி ஆங்காங்கே உள்ள முகாம்களில் தங்கினார்கள்.
2. உஷாரய்யா உஷாரு..
அவள் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவள். பிளஸ்-டூ வரை படித்துவிட்டு, துணிக் கடை ஒன்றில் வேலைபார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது அவள் காதல் வசப்பட்டாள்.
3. உஷாரய்யா உஷாரு..
அவர் விளையாட்டு வீரர். அவருக்கு ஒரு காதலி இருந்தாள். பெற்றோரிடம் தனது காதலை மறைத்த அவர், பெற்றோர் சொந்த ஊரில் அவருக்கு பெண் தேடியபோது மறுப்பு எதுவும் சொல்லவில்லை.
4. உஷாரய்யா உஷாரு..
அவனுக்கு 16 வயது. ஏழை குடும்பத்தை சேர்ந்த பெற்றோரின் ஒரே செல்ல மகன். அவனது தந்தை காலையிலே கூலி வேலைக்கு சென்றுவிடுவார்.
5. உஷாரய்யா உஷாரு..
அவளுக்கு 24 வயது. கிராமத்து பெண். அழகானவள். அழகு, தனது வாழ்க்கையில் பல்வேறு விதங்களில் சோகத்தை ஏற்படுத்திவிட்டதாக அவள் சொல்கிறாள்.