கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகத்துக்கு 125 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும்


கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகத்துக்கு 125 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும்
x
தினத்தந்தி 13 May 2018 11:00 PM GMT (Updated: 13 May 2018 6:47 PM GMT)

கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழகத்துக்கு 125 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சேலம்,

சேலம் மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஏ.வி.ஆர்.ரவுண்டானா முதல் குரங்குசாவடி சந்திப்பு வரையில் ரூ.82.27 கோடி மதிப்பீட்டில் புதிதாக மேம்பாலம் கட்டும் பணி தொடங்கி நிறைவடைந்தது. இதையடுத்து கடந்த வாரம் இந்த மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது. இந்தநிலையில், புதிய உயர்மட்ட மேம்பாலம் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு புதிய மேம்பாலத்தை ரிப்பன் வெட்டி மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து ஏ.வி.ஆர்.ரவுண்டானா பகுதியில் புதிய மேம்பாலம் திறப்பு, தாரமங்கலம் புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் புதிய போலீஸ் நிலையங்கள் தொடக்க விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ரோகிணி வரவேற்றார்.

விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய மேம்பாலத்தை திறந்து வைத்தும், புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டியும், ஆத்தூர் டவுன் மற்றும் கருமந்துறை புதிய காவல் நிலையங்களை தொடங்கி வைத்தும் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

சேலம் மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் அனைவரும் சிரமப்பட்டு வந்தனர். இதை கருத்தில் கொண்டு சேலம் மாநகரில் ஏ.வி.ஆர்.ரவுண்டானா, திருவாக்கவுண்டனூர் ஆகிய பகுதியில் புதிய மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா விடம் நான் கோரிக்கை விடுத்தேன். அப்போது அவர், தேசிய நெடுஞ்சாலையில் எப்படி பாலம் கட்டமுடியும்? அதற்கு மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்று கூறினார்.

தமிழகத்தில் குடிமராமத்துப்பணி மூலம் நீர்நிலைகள் தூர்வாரியும், ஏரி, குளங்கள் ஆழப்படுத்தப்பட்டும் வருகிறது. விவசாய மக்கள் பயன்பெறும் வகையில் தடுப்பணைகள் கட்ட ரூ.1000 கோடியில் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ரூ.350 கோடியில் விரைவில் அந்த பணிகள் தமிழகம் முழுவதும் தொடங்கும். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். அந்த வகையில் 2-ம் கட்டமாக குடிமராமத்துப்பணிக்கு 1514 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. விவசாயிகளை வைத்து அந்த பணிகளை செய்ய அரசு முடிவு செய்து இருக்கிறது.

தமிழகத்துக்கு நீர் ஆதாரமாக விளங்கும் எல்லா நதிகளும் அண்டை மாநிலங்களிலேயே உற்பத்தியாகின்றன. அதாவது, கர்நாடகாவில் காவிரி, கேரளாவில் முல்லை பெரியாறு, ஆந்திராவில் பாலாறு ஆகிய இடங்களில் உற்பத்தியாகும் தண்ணீர் இங்கு வந்தடைகிறது. இந்த நீர் ஆதாரத்திற்கு அண்டை மாநிலங்களை சார்ந்தே இருக்க வேண்டியுள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து மத்திய நீர்பாசனத்துறை மந்திரி நிதின்கட்காரியிடம் ஆலோசனை நடத்தினேன். அப்போது, அவர் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறினார்.

கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் தெலுங்கானா, ஆந்திரா வழியாக தமிழகத்துக்கு வந்தடையும். இதன்மூலம் தமிழகத்துக்கு 125 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும். கோதாவரியில் இருந்து தற்போது கடலில் வீணாக கலக்கும் இந்த தண்ணீர் தமிழகத்துக்கு கிடைக்கும்போது, நமது விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும். இந்த தண்ணீரை தமிழகத்தில் உள்ள மாயனூர் கட்டளை கதவணை மூலம் விவசாயிகள் பயன்படுத்துவார்கள்.

மேட்டூர் அணையில் இருக்கும் உபரிநீர் சேலம், நாமக்கல், திருச்சி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் புதிய கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கான திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேளாண்மை, மருத்துவம், கல்வி, சுகாதாரம் என அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடத்தில் வகிக்கிறது. மக்கள் தேவையை உடனுக்குடன் நிறைவேற்றும் அரசாக இந்த அரசு உள்ளது.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். 

Next Story