பாஞ்சாலங்குறிச்சியில் மாட்டு வண்டி போட்டி


பாஞ்சாலங்குறிச்சியில் மாட்டு வண்டி போட்டி
x
தினத்தந்தி 13 May 2018 9:00 PM GMT (Updated: 13 May 2018 6:55 PM GMT)

பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி ஆலய விழாவையொட்டி மாட்டு வண்டி போட்டி நடந்தது.

ஓட்டப்பிடாரம், 

பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி ஆலய விழாவையொட்டி மாட்டு வண்டி போட்டி நடந்தது.

மாட்டுவண்டி போட்டி

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய 62-வது ஆண்டு விழாவையொட்டி மாட்டு வண்டி போட்டி நடந்தது. வீரசக்கதேவி ஆலயக்குழு தலைவர் முருகபூபதி தலைமை தாங்கினார். செயலாளர் மல்லுசாமி, பொருளாளர் சுப்புராஜ்சவுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டிகள் பெரிய மாட்டு வண்டி போட்டி, சிறிய மாட்டு வண்டி போட்டி ஆகிய 2 பிரிவுகளாக நடத்தப்பட்டன. ஓட்டப்பிடாரம், குறுக்குச்சாலை, பாஞ்சாலங்குறிச்சி சாலையில் போட்டிகள் நடந்தது.

பரிசு

பெரிய மாட்டு வண்டி போட்டி 15 கிலோ மீட்டர் தூரம் நடந்தது. இதில் 10 வண்டிகள் கலந்து கொண்டன. போட்டியை மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ஞானசம்பந்தன் தொடங்கி வைத்தார். இதில் வேலாங்குளம் கண்ணன் வண்டி முதல் இடம் பிடித்து ரூ.40 ஆயிரம் பரிசும், காடமங்கலம் சந்தியாதேவி வண்டி 2-வது இடம் பிடித்து ரூ.35 ஆயிரம் பரிசும், சண்முகபுரம் விஜயக்குமார் வண்டி 3-வது இடம் பிடித்து ரூ.28 ஆயிரம் பரிசும் வென்றது. வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு தொழில் அதிபர்கள் முத்துராஜ், கணேஷ்குமார், வேல்முருகன், செந்தில்ஆறுமுகம், சண்முகவேல், கதிரேசன் ஆகியோர் பரிசு வழங்கினர்.

சிறிய மாட்டு வண்டி போட்டி 9 கிலோ மீட்டர் தூரம் நடந்தது. இந்த போட்டியில் 16 வண்டிகள் பங்கேற்றன. போட்டியை மணியாச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் முதல் இடம் பிடித்த சிந்தலக்கட்டையை சேர்ந்த செல்வராஜ் வண்டிக்கு ரூ.20 ஆயிரம் பரிசும், 2-வது இடம் பிடித்த தென்காசி பிரபு வண்டிக்கு ரூ.17 ஆயிரம் பரிசும், 3-வது இடம் பிடித்த கம்பத்து பட்டி செல்வராஜ் வண்டிக்கு ரூ.15 ஆயிரம் பரிசும் வழங்கப்பட்டது. இந்த பரிசுகளை மாட்டு வண்டி உரிமையாளர்களிடம் தூத்துக்குடி மாவட்ட ம.தி.மு.க. இளைஞரணி துணை செயலாளர் வீரபாண்டிகோபி, ராமநாதபுரம் தே.மு.தி.க. மாவட்ட துணை செயலாளர் கோவிந்தராஜ், தொழில் அதிபர்கள் ஆறுமுகம், வெங்கடாசலம், விளாத்திகுளம் ஒன்றிய ம.தி.மு.க செயலாளர் மணிராஜ் ஆகியோர் வழங்கினர்.

பரமன்பச்சேரி

இதேபோன்று ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பரமன்பச்சேரி காளியம்மன் கோவில் கொடை விழாவையொட்டி மாட்டு வண்டி போட்டி நடந்தது. ஊர்நாட்டாண்மைகள் ராஜகனி, காளிமுத்து ஆகியோர் தலைமை தாங்கினர். போட்டிகள் பரமன்பச்சேரி, கீழமங்களம், குப்பனாபுரம், ஓசநூத்து சாலையில் நடந்தது.

பெரிய மாட்டு வண்டி போட்டியில் 9 வண்டிகள் பங்கேற்றன. போட்டியை பசுவந்தனை போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் மறுகால்குறிச்சி சுப்பம்மாள் வண்டி முதல் இடம் பிடித்து ரூ.20 ஆயிரம் பரிசை வென்றது. 2-வது பரிசு ரூ.17 ஆயிரத்தை சங்கரப்பேரி ஆறுமுகப்பாண்டியன் வண்டி பெற்றது. 3-வது பரிசு ரூ.14 ஆயிரத்தை மேட்டூர் அழகுபெருமாள் வண்டி பெற்றது. வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு சில்லாங்குளம் முத்துகருப்பன் கல்வி நிறுவன நிர்வாக இயக்குனர் டாக்டர் பாலமுருகன், பரமன்பச்சேரி பால்ராஜ், எட்டுராஜ், பாலமுருகன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

தொடர்ந்து நடந்த சிறிய மாட்டு வண்டி போட்டியில் 19 வண்டிகள் கலந்து கொண்டன. போட்டியில் சங்கரபேரி முண்டசாமி வண்டி முதல் இடம் பிடித்து ரூ.13 ஆயிரம் பரிசை வென்றது. 2-வது பரிசு ரூ.11 ஆயிரத்தை மறுகால்குறிச்சி மகாலட்சுமி வண்டியும், 3-வது பரிசு ரூ.9 ஆயிரத்தை பாளையங்கோட்டை மாரிமுத்து வண்டியும் பெற்றது. வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு பரமன்பச்சேரி கோபாலகிருஷ்ணன், ஓட்டுனர் சங்கத்தினர், கிராம பொதுமக்கள் பரிசுகளை வழங்கினர்.

Next Story