புனித தீர்த்தத்தில் பக்தர்கள் நீராட கட்டணம் நிர்ணயம் செய்ய குழு அமைப்பு கலெக்டர் தகவல்
ராமேசுவரத்தில் புனித தீர்த்தத்தில் பக்தர்கள் நீராட கட்டணம் நிர்ணயம் செய்ய குழு அமைக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
ராமேசுவரம்,
ராமேசுவரம் சங்குமால் பகுதியில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் மாவட்ட கலெக்டர் நடராஜன் தலைமையில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா, மாவட்ட வருவாய் அதிகாரி முத்துமாரி, வருவாய் கோட்டாட்சியர் சுமன், திட்ட இயக்குனர் ஹெட்ஸி லீமா அமலினி, மாவட்ட சுற்றுலா அலுவலர் மருதுபாண்டி, ராமேசுவரம் நகரசபை ஆணையாளர் வீரமுத்துக்குமார், கோவில் இணை ஆணையர் மங்கையற்கரசி, கோட்ட பொறியாளர் மயில்வாகனன், மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை உள்பட அனைத்து துறை அதிகாரிகளும், அகில இந்திய யாத்திரை பணியாளர் சங்கம், கடற்கரை புரோகிதர் சங்கம், தங்கும் விடுதி உரிமையாளர் சங்கம், ஓட்டல் சங்கம், நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம், ஆட்டோ ஓட்டுனர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ராமேசுவரம் வளர்ச்சி குறித்து ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை எடுத்துக்கூறினர். அப்போது ராமேசுவரத்தில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும், சுற்றுலா பயணிகளுக்கும், பக்தர்களுக்கு வசதியாக பூங்கா அமைக்கப்பட வேண்டும், முக்கிய இடங்களுக்கு மினி பஸ்கள் இயக்க வேண்டும். கூடுதலாக பேட்டரி கார்கள் இயக்கவேண்டும், நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் செயல்படுத்த வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கூறியதாவது:– அகில இந்திய யாத்திரை பணியாளர் சங்கத்தினர் ராமேசுவரம் வரும் பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது. கட்டண நிர்ணயம் செய்வதற்கு கமிட்டி அமைக்கப்படும். இவர்களது ஆலோசனைப்படி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு அந்த கட்டணத்தையே அனைவரும் வசூலிக்க வேண்டும். அக்னி தீர்த்த கடலில் நீராடும் பக்தர்கள் தங்களது பழைய துணிகளை கடற்கரையில் விட்டுச்செல்வதால் அந்த பகுதி முழுவதும் அசுத்தமாக உள்ளது. இதுகுறித்து புரோகிதர்கள் கவனம் செலுத்தி எக்காரணம்கொண்டும் பழைய துணிகளை கடற்கரையில் போடுவதற்கு அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு பக்தர்கள் விட்டுச்செல்லும் பழைய துணிகளுக்கு புரோகிதர்கள் பொறுப்பேற்க வேண்டும். மேலும் பக்தர்களிடம் புரோகிதர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக தகவல் வந்துள்ளது. எனவே முறையான கட்டணம் நிர்ணயம் செய்து அதுதொடர்பாக தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளில் விளம்பர பலகை வைக்க வேண்டும்.
நகராட்சி நிர்வாகத்தினர் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் பயன்படுத்தும் வகையில் அனைத்து கழிப்பறைகளையும் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். கோவில் வாசலில் இருந்து அக்னி தீர்த்த கடற்கரை வரை தற்போது அலங்கார கற்கள் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் வெயில் நேரத்தில் வரும் பக்தர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கோவில் நிர்வாகம் சார்பில் அக்னி தீர்த்த கடற்கரை வரை உயரமாக பந்தல் அமைக்க வேண்டும். ராமேசுவரம் நகர் பகுதியில் இடையூறாக கிடக்கும் மின் கம்பங்களை மின்வாரியத்தினர் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
தீவு பகுதியில் பாலிதீன் உபயோகத்தை முழுமையாக கைவிட வேண்டும். இனிவரும் காலங்களில் தனுஷ்கோடி செல்லும் வாகனங்கள் எம்.ஆர்.சத்திரத்துடன் நிறுத்தப்பட்டு அங்கிருந்து அரிச்சல்முனை வரை பேட்டரி கார்கள் இயக்க திட்டமிடப்பட்டுஉள்ளது. அது விரைவில் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.