குமரி மாவட்டத்தில் பரவலாக மழை மின்னல் தாக்கியதில் சில வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம்


குமரி மாவட்டத்தில் பரவலாக மழை மின்னல் தாக்கியதில் சில வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதம்
x
தினத்தந்தி 13 May 2018 11:00 PM GMT (Updated: 13 May 2018 7:03 PM GMT)

குமரி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் சில வீடுகளில் மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி அருகே மேலடுக்கு சுழற்சி உருவாகி இருப்பதாலும், மேலும் கிழக்கு திசை மற்றும் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றும் தமிழகம் வழியாக செல்வதாலும், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் குமரி மாவட்டத்தில் நேற்று மாலை வானில் கருமேகங்கள் தோன்றி மழைக்கான அறிகுறிகள் தென்பட்டன. இதைத் தொடர்ந்து 5 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது.

முதலில் லேசான தூறலாக தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல சற்று அதிகமாக பெய்தது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள், பூதப்பாண்டி, தடிக்காரன்கோணம், துவரங்காடு, அருமநல்லூர், கடுக்கரை, மார்த்தாண்டம், அருமனை, குலசேகரம், களியல், கடையாலுமூடு, வெள்ளிச்சந்தை, களியக்காவிளை, சுவாமியார்மடம், திருவட்டார் உள்ளிட்ட இடங்களிலும் மழை பரவலாக பொழிந்தது. மேலும், மலையோர பகுதிகள் மற்றும் அணை பகுதிகளிலும் மழை கொட்டியது. மழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

நாகர்கோவிலில் செம்மாங்குடி ரோடு, கே.பி. ரோடு, கேப் ரோடு, மணிமேடை சந்திப்பு, கலெக்டர் அலுவலக சந்திப்பு, வேப்பமூடு சந்திப்பு, பீச்ரோடு உள்ளிட்ட சாலைகளில் தண்ணீர் அதிகளவில் ஓடியது. ஆனால் பெரும்பாலான சாலைகளில் மழை நீருடன் கழிவுநீரும் கலந்தோடியது.

பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் தேங்கிய மழை தண்ணீர் வடிந்தோட சற்று நேரம் ஆனது. இதனால் 1 அடி அளவுக்கு சாலையில் மழை நீர் தேங்கியிருந்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதியடைந்த னர். சில இடங்களில் கால்வாயில் மழைநீருடன் பாலித்தீன் பைகளும் இழுத்து வரப்பட்டன. மழை ஓய்ந்த பிறகு சாலைகளில் பாலித்தீன் பைகளாக காட்சியளித்தன.

போலீஸ் சூப்பிரண்டு அலுவலக சாலையில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் இருப்பதால் அந்த சாலையில் சேறும், சகதியுமாக காட்சியளித்தது. கட்டபொம்மன் சந்திப்பில் இருந்து மணிமேடை சந்திப்பு வரையும் இதே நிலை காணப்பட்டது. குலசேகரம் பகுதியில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் சில வீடுகளில் டி.வி., பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன. மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து எங்கும் குளுமை பரவியிருந்தது.


Next Story