குழந்தைகளை கடத்த வந்தவர் என்று நினைத்து ஓட்டல் தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது
குழந்தைகளை கடத்த வந்தவர் என்று நினைத்து ஓட்டல் தொழிலாளியை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரியபாளையம்,
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள பேரத்தூர் சாலையில் நேற்று சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றி திரிந்த வாலிபர் ஒருவரை அந்த பகுதி பொதுமக்கள் சிலர் தாக்கி கொண்டிருப்பதாக வெங்கல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அந்த வாலிபரை போலீசார் மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
பின்னர் பாதிக்கப்பட்ட வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த வாலிபர் விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தாலுகா, தெற்கு பொன்னாவரம் கிராமத்தை சேர்ந்த முத்துபட்டுராஜி (வயது 20) என்பது தெரியவந்தது. சென்னையில் உள்ள ஓட்டலில் தொழிலாளியாக பணியாற்றி வந்த அவர் கடந்த வாரம் திருவள்ளூரை அடுத்த ஈக்காட்டில் உள்ள ஒரு ஓட்டலில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.
நேற்று ஓட்டலுக்கு விடுமுறை என்பதால் பேரத்தூர் சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சில வாலிபர்கள் அவரை வழிமறித்து சரமாரியாக கேள்வி கேட்டனர். அப்போது முத்துபட்டுராஜி சற்று தயக்கத்துடன் பதில் கூறியுள்ளார். இதனால் அவரை குழந்தை கடத்த வந்தவர் என்று நினைத்து அவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இது குறித்து வெங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேரத்தூர் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த வள்ளரசு (19), கோட்ரஸ் தெருவை சேர்ந்த சக்திவேல் (19), புதுமனை தெருவை சேர்ந்த சக்திவேல் (19) ஆகியோரை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.