புதுச்சேரியில் பெண் இறந்ததாக கருதி இறுதி சடங்கு ஏற்பாடுகள் செய்த உறவினர்கள்


புதுச்சேரியில் பெண் இறந்ததாக கருதி இறுதி சடங்கு ஏற்பாடுகள் செய்த உறவினர்கள்
x
தினத்தந்தி 14 May 2018 4:00 AM IST (Updated: 14 May 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் பெண் இறந்தாக கருதி உறவினர்கள் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி,

புதுவை மீனாட்சிப்பேட்டை வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் தீனதயாளன். அமுதசுரபி ஊழியர். இவரது மனைவி தமிழரசி (வயது 35).

தமிழரசிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைவலி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவரது தலையை ஸ்கேன் செய்து பார்த்தபோது ரத்தம் உறைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. செயற்கை சுவாசத்துடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்த டாக்டர்கள் தமிழரசிக்கு மூளைச்சாவு ஏற்பட்ட செய்தியை கூறியுள்ளனர். அதை தமிழரசியின் உறவினர்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

நேராக வீட்டிற்கு வந்த அவர்கள் தமிழரசி இறந்துவிட்டதாக கருதி அவரது இறுதிசடங்கிற்கான ஏற்பாடுகளை செய்தனர். மேலும் நேற்று காலை தமிழரசியின் உடலை வாங்குவதற்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு சென்ற அவர்கள் உடலையும் கேட்டனர்.

ஆனால் டாக்டர்கள் அதிகாரப்பூர்வமாக தமிழரசியின் இறப்பு அறிவிக்கப்பட்டால்தான் உடலை கொடுக்க முடியும் என்று கூறிவிட்டனர். இதனால் தமிழரசியின் உறவினர்கள் டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின் மூளைச்சாவு என்றால் என்ன என்பது குறித்து அவர்களிடம் டாக்டர்கள் விளக்கி கூறினார்கள்.

தற்போது தமிழரசிக்கு வழங்கப்படும் செயற்கை சுவாசத்தை நிறுத்திவிட்டால் அவர் இறந்துவிடுவார் என்று கூறப்படுகிறது. இதனால் அடுத்து என்ன நிலை எடுப்பது? என்பது குறித்து தமிழரசியின் உறவினர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.


Next Story