தர்மபுரி பஸ் நிலையத்தில் உணவு பாதுகாப்பு மையம் அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்


தர்மபுரி பஸ் நிலையத்தில் உணவு பாதுகாப்பு மையம் அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 14 May 2018 4:00 AM IST (Updated: 14 May 2018 2:24 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள உணவு பாதுகாப்பு மையத்தை அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்.

தர்மபுரி,

தர்மபுரி பஸ் நிலையத்தில் உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் உணவு பாதுகாப்பு மைய திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் விழாவில் கலந்து கொண்டு உணவு பாதுகாப்பு மையத்தை திறந்து வைத்தார். பின்னர் கோடை காலங்களில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய உணவு மற்றும் ஆரோக்கியம் என்ற தலைப்பிலான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட்டு அவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார்.

விழாவில் அமைச்சர் பேசியதாவது:-

தமிழக அரசின் சார்பில் தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மூலமாக இங்கு அமைக்கப்பட்டுள்ள உணவு பாதுகாப்பு மையம் தரமான உணவு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி உணவு பாதுகாப்பு குறித்தும், கோடை காலங்களில் பின்பற்ற வேண்டிய உணவு பழக்க வழக்கங்கள் குறித்தும் பொதுமக்கள் மற்றும் நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. தரமான பாதுகாப்பான உணவை பொதுமக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதே உணவு பாதுகாப்புத் துறையின் நோக்கம் ஆகும்.

சுற்றுலா தலமான ஒகேனக்கல்லில் மே மாதம் முழுவதும் உணவு பாதுகாப்பு மையம் அமைக்கப்படுகிறது. உணவு பாதுகாப்பிற்கு தேவையான அம்சங்களுடன் மாதிரி உணவு வண்டி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் பாதுகாப்பான உணவுகள், பாதுகாப்பற்ற உணவுகள், கலப்பட உணவுப்பொருட்கள், தரம் குறைந்த உணவுகள், அதிக வண்ணமேற்றப்பட்ட உணவுகள் மற்றும் பாதுகாப்பான, பாதுகாப்பற்ற உணவு பொட்டலமிடுதல், பரிமாறும் உபகரணம் போன்றவை காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

எளிய முறையில் உணவு பொருட்களில் கலப்படத்தை கண்டறியும் முறை குறித்த செயல்முறை விளக்கமும் செய்து காண்பிக்கப்படுகிறது. உணவு பாதுகாப்பு குறித்த காட்சி பலகைகள் உணவு வணிகர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. உணவு பொருட்கள் விற்கும் வியாபாரிகள் உணவு பாதுகாப்புத் துறைக்கு முழுமையான ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். பொதுமக்கள் தரமான உணவை சாப்பிட்டு சுகாதாரமாகவும், ஆரோக்கியமாகவும் வாழ வேண்டும். இவ்வாறு அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

இந்த விழாவில் உதவி கலெக்டர் ராமமூர்த்தி, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பிருந்தா, தாசில்தார் கோபெருந்தேவி, நகராட்சி ஆணையர் கிருஷ்ணகுமார், உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் பூக்கடை ரவி, கூட்டுறவு சங்க தலைவர் கோவிந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story