தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை? கூட்டணி ஆட்சிக்கு ஆயத்தமாகும் கட்சிகள்
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை அமையும் வாய்ப்பு இருப்பதாக பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.
பெங்களூரு, மே.14-
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை அமையும் வாய்ப்பு இருப்பதாக பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் கூட்டணி ஆட்சிக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.
கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
தொங்கு சட்டசபை
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் ஜெயநகர் மற்றும் ராஜராஜேஸ்வரிநகர் ஆகிய தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் 222 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் நடந்துள்ளது. ஆளும் காங்கிரஸ் சார்பில் 220 தொகுதியிலும், பா.ஜனதா சார்பில் 222 தொகுதியிலும், ஜனதா தளம்(எஸ்)-பகுஜன் சமாஜ் கூட்டணி சார்பில் 217 தொகுதியிலும் போட்டியிட்டுள்ளன.
இந்த நிலையில் பல்வேறு செய்தி ஊடகங் கள், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளன. அதில் கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை தான் அமையும் எனறு பெரும்பாலான அமைப்புகளின் கணிப்புகள் கூறுகின்றன. கணிப்புகள் இவ்வாறு கூறினாலும், ஆளும் காங்கிரசும், பா.ஜனதாவும் தங்கள் கட்சிக்கு தனி பெரும்பான்மை கிடைக்கும் என்று அதீத நம்பிக்கையை தெரிவித்து வருகின்றன.
சிக்கல் இருக்காது
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரையில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் அக்கட்சி தேர்தலை எதிர்கொண்டது. அதனால் முதல்-மந்திரி வேட்பாளர் சித்தராமையா தான் என்பது மறைமுகமான தகவல் ஆகும். இதை ராகுல் காந்தியே ஒரு முறை பெங்களூருவில் நிருபர்களுடன் கலந்துரையாடியபோது அதிகாரப்பூர்வமற்ற முறையில் கூறினார். மற்றொருபுறம் பா.ஜனதாவின் முதல்-மந்திரி வேட்பாளராக எடியூரப்பா இருக்கிறார்.
காங்கிரஸ் தனி பெரும்பான்மையை பெற்றால், சித்தராமையா முதல்-மந்திரி ஆவதில் சிக்கல் இருக்காது. அதேபோல் பா.ஜனதா முழு மெஜாரிட்டியை பெற்றால் எடியூரப்பா தான் முதல்- மந்திரி என்பது அனைவரும் அறிந்த விஷயம். கருத்து கணிப்புகளின்படி கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை அமைந்தால் அடுத்தது என்ன? என்ற கேள்வி எழுகிறது. இதற்கு அரசியலில் பல்வேறு கணக்குகள் போடப்படுகின்றன.
கேள்விக்குறியாக உள்ளது
தேவேகவுடாவின் தலைமையில் செயல்படும் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் ஆதரவு இல்லாமல் மற்ற கட்சிகள் ஆட்சி அமைக்க முடியாது. ஆளும் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) ஆகிய கட்சிகள் மதசார்பற்ற கொள்கையை பின்பற்றுகின்றன. அக்கட்சிகள் கொள்கை அளவில் ஒன்றுபட்டு இருந்தாலும், இரு கட்சிகள் இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. அதனால் இந்த கட்சிகள் இடைய கூட்டணி ஏற்படுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.
மற்றொருபுறம் பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கொள்கையில் முரண்பட்டு இருக்கின் றன. பாஜனதா மதவாத கட்சி என்று தேவேகவுடா குற்றம்சாட்டுகிறார். கொள்கையில் வேறுபாடு உள்ள இந்த கட்சிகள் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்று சொல்ல முடியாது. ஏனென்றால், கடந்த 2003-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இதேபோல தான் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.
காங்கிரஸ்- ஜனதா தளம்(எஸ்) கூட்டணி
அப்போது காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடைபெற்றது. திடீரென நடைபெற்ற அரசியல் மாற்றங்களில் பா.ஜனதாவுடன் குமாரசாமி கூட்டணி அமைத்து அவர் முதல்-மந்திரி ஆனார். அதனால் கடந்த காலத்தில் பா.ஜனதா மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்த வரலாறு உண்டு. இதற்கிடையே பா.ஜனதாவுடன் கூட்டணி குறித்த கேள்விக்கு, தேவே கவுடா பதிலளிக்கையில், எக்காரணம் கொண்டும் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க மாட்டேன் என்றும், ஒருவேளை பா.ஜனதாவுடன் குமாரசாமி கூட்டு சேர்ந்தால் அவரை வீட்டைவிட்டே வெளியேற்றுவேன் என்றும் சற்று கடுமையாக கூறி இருக் கிறார்.
இந்த நிலையில் கர்நாடகத்தில் தொங்கு சட்டசபை அமைந்தால், ஆளும் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அமைய அதிக வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். அவ்வாறு கூட்டணி அமைந்தால், தேவேகவுடாவின் முதல் நிபந்தனை, சித்தராமையாவை முதல்-மந்திரியாக நியமிக்கக்கூடாது என்பதாகத்தான் இருக்கும். ஏனென்றால், ஜனதா தளம்(எஸ்) கட்சியில் இருந்து வெளியேறி காங்கிரசில் சேர்ந்தவர் சித்தராமையா. சமீப காலமாக தேவேகவுடாவை சித்தராமையா கடுமையாக தாக்கி பேசி இருக்கிறார். இது தன்னை மனதளவில் புண்படுத்தி இருக்கிறது என்பதை தேவேகவுடா பகிரங்கமாகவே கூறினார். எனவே சித்தராமையாவுக்கு மீண்டும் முதல்-மந்திரி வாய்ப்பு கிடைக்காது என்றே சொல்லப்படுகிறது.
மல்லிகார்ஜுன கார்கே
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி, அதன் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதல்-மந்திரி பதவியை வழங்க தயாராக இருக்கிறது. அவர் தலித் சமூகத்தை சேர்ந்த மூத்த தலைவர் ஆவார். தற்போது அவர் நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவராக செயலாற்றி வருகிறார். கர்நாடகத்தில் இதுவரை தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் யாரும் முதல்- மந்திரி பதவி நாற்காலியை அலங்கரித்தது இல்லை.
அதனால் தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு முதல்-மந்திரி பதவியை வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்பட அனைத்துக்கட்சிகளிலுமே அடிக்கடி குரல் எழுந்து வருகிறது. காங்கிரசின் இந்த நிலையை தேவேகவுடாவும் ஒப்புக்கொள்வார் என்றே சொல்லப்படுகிறது. கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டால், தலித் சமூகத்திற்காக முதல்-மந்திரி பதவியை விட்டுக்கொடுக்க தயார் என்று சித்தராமையா நேற்று மைசூருவில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இவற்றை எல்லாம் பார்க்கும்போது சூழ்நிலை ஏற்பட்டால் கூட்டணி ஆட்சிக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன என்பது தெளிவாகிறது.
Related Tags :
Next Story