பொம்மிநாயக்கன்பட்டியில் இரு பிரிவினர்மோதல்: ஆர்.டி.ஓ. தலைமையில் பேச்சுவார்த்தை


பொம்மிநாயக்கன்பட்டியில் இரு பிரிவினர்மோதல்: ஆர்.டி.ஓ. தலைமையில் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 13 May 2018 10:15 PM GMT (Updated: 13 May 2018 10:08 PM GMT)

பொம்மிநாயக்கன்பட்டியில் இரு பிரிவினர் மோதல் குறித்து ஆர்.டி.ஓ. தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

பெரியகுளம், 

பெரியகுளம் தாலுகா தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டியில் இரு பிரிவினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் இரு பிரிவினரின் வீடுகள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. மோட்டார் சைக்கிள், கார்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன. இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே இந்த பிரச்சினை தொடர்பாக பெரியகுளம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. கூட்டத்துக்கு ஆர்.டி.ஓ. (பொறுப்பு) சென்னியப்பன் தலைமை தாங்கினார். ஆதிதிராவிடர் நல மாவட்ட அலுவலர் கிருஷ்ணவேணி, போலீஸ் துணை சூப்பிரண்டு கணபதி, தாசில்தார் கிருஷ்ணகுமார், மண்டல துணை தாசில்தார் மோகன்ராம் மற்றும் இரு பிரிவை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பொம்மிநாயக்கன்பட்டியில் ஏதேனும் நிகழ்ச்சிகளின் போது பஸ் நிறுத்தம், பொது இடத்தில் பேனர், பந்தல் போடக்கூடாது. பொது இடங்களில் ஒலி பெருக்கி கட்டக்கூடாது. எந்த ஒரு பிரச்சினை என்றாலும் பொதுமக்கள் போலீசாரிடம் தெரிவிக்க வேண்டும். மாறாக தகராறில் ஈடுபடக்கூடாது என்பவை உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Next Story