‘தமிழகத்தில் ரஜினிகாந்த் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார்’ இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் பேட்டி
தமிழகத்தில் ரஜினிகாந்த் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார் என இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் ராம.ரவிக்குமார் கூறியுள்ளார்.
வேடசந்தூர்,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடந்த ஒரு விழாவில் கலந்துகொள்ள இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ராம.ரவிக்குமார் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் இருக்கும் தங்க தேர்களில் முழுமையாக தங்கம் உள்ளதா? என்பதை ஆய்வு செய்யவேண்டும். தமிழகத்தில் இதுவரை ஆட்சி செய்த கட்சிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும், தடுப்பணை கட்டவும் நடவடிக்கை எடுக்கவில்லை.
நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவது காலத்தின் கட்டாயம் ஆகும். தென்னக நதிகளை இணைப்பதே தனது வாழ்நாள் கனவு என்று அவர் கூறியுள்ளார். ரஜினியின் ஆன்மிக அரசியல் தான் நதிகளை இணைக்கும். தமிழகத்தில், ரஜினிகாந்த் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார். அவருக்கு மக்களிடம் செல்வாக்கு இருப்பதால், ஆன்மிக அரசியல் புரட்சி தமிழகத்தில் உருவாகும். மக்கள் நீதி மையம் என்ற கட்சியை கமல் தொடங்கியுள்ளார். அவர் ஒரு குழப்பவாதி, அவரால் தமிழ்நாட்டிற்கு எந்தவித தீர்வும் கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில செயலாளர் சரவணன், மாவட்ட செயலாளர்கள் மணிகண்டன், ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story