திண்டுக்கல்லில் பயங்கரம்: கத்தியால் குத்தி 2 பெண்கள் படுகொலை, காயம் அடைந்த 2 பேருக்கு தீவிர சிகிச்சை


திண்டுக்கல்லில் பயங்கரம்: கத்தியால் குத்தி 2 பெண்கள் படுகொலை, காயம் அடைந்த 2 பேருக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 13 May 2018 11:30 PM GMT (Updated: 13 May 2018 10:24 PM GMT)

திண்டுக்கல்லில் கத்தியால் குத்தி 2 பெண்கள் படுகொலை செய்யப்பட்டனர். காயம் அடைந்த தம்பதி உள்பட 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல், 

திண்டுக்கல் பேகம்பூர் யூசுபியா நகரை சேர்ந்தவர் சாகுல் அமீது (வயது 55). டீக்கடை உரிமையாளர். நேற்று இவர், தனது வீட்டின் முன்பு மனைவி கொலுசன் பீவி (50), அவருடைய தங்கை பர்கத் நிஷா (45) ஆகியோருடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வேகமாக வந்து இறங்கினர்.

பின்னர் அவர்கள், மறைத்து வைத்திருந்த கத்தியால் 3 பேரையும் சரமாரியாக குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் 3 பேரும் சரிந்து விழுந்தனர். அப்போது அந்த வழியாக நடந்து வந்த ஞானபிரகாசபுரத்தை சேர்ந்த பிரவீன்குமார் (19) என்பவரையும் மர்ம நபர்கள் கழுத்தில் குத்தி விட்டு மோட்டார் சைக்கிளிலேயே தப்பி சென்றனர்.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். பின்னர் கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி பர்கத் நிஷா பரிதாபமாக இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சாகுல் அமீது, கொலுசன் பீவி ஆகியோர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி கொலுசன் பீவி இறந்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சாகுல்அமீதுக்கு மதுரை அரசு மருத்துவமனையிலும், பிரவீன்குமாருக்கு திண்டுக்கல் அரசு மருத்தவமனையிலும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல்லில் பதற்றத்தை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கத்திக்குத்தில் படுகாயமடைந்த சாகுல் அமீது மகன் சேக்பரீத் (27) என்பவருக்கும், ஜின்னா நகரை சேர்ந்த மதினா பேகம் (19) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்தநிலையில், கடந்த மாதம் மதினா பேகம் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார்.

மதினாபேகத்தை சரியாக கவனிக்காததால் அவர் இறந்துவிட்டதாக உறவினர்கள் கருதினர். இதுதொடர்பாக மதினாபேகத்தின் உறவினர்களுக்கும், சாகுல் அமீதின் உறவினர்களுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன்காரணமாக கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளதாக கருதுகிறோம். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story