பொங்கலூர் ஒன்றியத்தில் அத்திக்கடவு குடிநீர் வினியோகத்தில் குளறுபடி: கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ ஆய்வில் அதிர்ச்சி


பொங்கலூர் ஒன்றியத்தில் அத்திக்கடவு குடிநீர் வினியோகத்தில் குளறுபடி: கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ ஆய்வில் அதிர்ச்சி
x
தினத்தந்தி 13 May 2018 11:30 PM GMT (Updated: 13 May 2018 11:25 PM GMT)

பொங்கலூர் ஒன்றியத்தில் அத்திக்கடவு குடிநீர் வினியோகம் செய்வதில் குளறுபடி நடைபெறுவது குறித்து கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ ஆய்வின் போது தெரியவந்ததால் அவர் அதிர்ச்சியடைந்தார்.

பொங்கலூர்,

பொங்கலூர் ஒன்றியத்தில் உள்ள 16 ஊராட்சிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் வினியோகம், மின்சார வசதிகள், மக்களுக்கு வழங்கப்படும் அரசின் இதர பயன்கள் மற்றும் சேவைகள் குறித்து நான்கு கட்டங்களாக ஆய்வு பணிகளை கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ ஆய்வு செய்து வருகிறார். முதல் கட்டமாக கடந்த 10-ந் தேதி எலவந்தி, கேத்தனூர், வாவிபாளையம் மற்றும் வடமலைபாளையம் ஆகிய ஊராட்சிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து நேற்று முன்தினம் வே.கள்ளிப்பாளையம், காட்டூர், மாதப்பூர் மற்றும் பொங்கலூர் ஆகிய ஊராட்சிகளில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு போன அனைத்து ஊராட்சிகளிலும் பெரும்பாலும் தங்கள் பகுதிக்கு அத்திக்கடவு குடிநீர் சரியாக வருவதில்லை என்ற குற்றச்சாட்டையே பொதுமக்கள் தெரிவித்தனர். அதிலும் தங்கள் பகுதிக்கு ஒதுக்கப்பட்ட அளவில் இருந்து பாதி அளவு மட்டுமே வருவதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கள்ளிப்பாளையம் ஊராட்சியில் ஆய்வு செய்த எம்.எல்.ஏ குடிநீர் வினியோகம் செய்யும் பணியாளர்களை தனித்தனியாக அழைத்து அத்திக்கடவு குடிநீர் எவ்வளவு வருகிறது? என்று கேட்டார். ஊராட்சி செயலர் தங்கராஜிடமும் ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட அளவு என்ன? என்று கேட்டார்.

அப்போது அவர் ஒரு நாளைக்கு 2 லட்சத்து 25 ஆயிரம் லிட்டர் குடிநீர் வரவேண்டும் என்றும், ஆனால் 1 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் குடிநீர் மட்டுமே வருவதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த எம்.எல்.ஏ., குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை கண்டித்ததுடன், இனிமேல் இதுபோன்று நடக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார். மேலும் அகிலாண்டபுரத்தில் மின் அழுத்த குறைபாட்டை சரிசெய்து தருமாறு மின்சார வாரிய அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

மாதம் ஒரு முறை குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யவேண்டும், குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் புதிய ஆழ்குழாய் கிணறுகளின் தேவை, மின் மோட்டார் தேவை குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது ஏராளமான பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள் குறித்து கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

ஆய்வின்போது முன்னாள் ஒன்றிய தலைவர் சிவாசலம், துணை தலைவர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ராஜேந்திரன், நாகராஜ், சந்திரசேகர், ஒன்றிய ஆணையாளர் ஹரிஹரன் ஆகியோர் உடன் இருந்தனர். நாளை (செவ்வாய்க்கிழமை) வடக்கு அவினாசிபாளையம், உகாயனூர், தொங்குட்டிபாளையம், பெருந்தொழுவு ஆகிய ஊராட்சிகளிலும், 16-ம் தேதி நாச்சிபாளையம், கண்டியன்கோவில், அலகுமலை மற்றும் தெற்கு அவினாசிபாளையம் ஆகிய ஊராட்சிகளில் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

Next Story