ஈரோடு மாவட்டத்தில் ரூ.135 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்ட பணிகள்: முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
ஈரோடு மாவட்டத்தில் ரூ.135 கோடி மதிப்பிலான வளர்ச்சித்திட்ட பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
பவானி,
ஈரோடு மாவட்டம் பவானியில் தமிழக அரசின் புதிய திட்டங்கள் அடிக்கல்நாட்டு விழா, முடிவடைந்த திட்டப்பணிகள் தொடக்கவிழா, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா ஆகிய நிகழ்ச்சிகள் பவானி அரசு ஆண்கள் பள்ளிக்கூட மைதானத்தில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமை தாங்கினார்.
கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி.தங்கமணி, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் வெ.சரோஜா, சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்துகொண்டு பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூட ஆண்டு விழா நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தார். மேலும் ரூ.58 கோடியே 35 லட்சம் மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். ஏற்கனவே முடிவுற்ற ரூ.76 கோடியே 63 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்து பேசினார். மொத்தம் ரூ.134 கோடியே 98 லட்சம் மதிப்பிலான வளர்ச்சித்திட்ட பணிகள் ஈரோடு மாவட்டத்துக்கு முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும், ரூ.31 கோடியே 7 லட்சம் மதிப்பில் 5 ஆயிரத்து 779 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.
விழாவில் எம்.பி.க்கள் எஸ்.செல்வகுமாரசெல்லையன், வி.சத்தியபாமா, கோபாலகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, இ.எம்.ஆர்.ராஜா என்கிற ராஜாகிருஷ்ணன், வி.பி.சிவசுப்பிரமணி, சு.ஈஸ்வரன், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ், சிந்தாமணி தலைவர் ஜெகதீசன், மாநகராட்சி முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், ஆவின் தலைவர் பி.சி.ராமசாமி, சிட்கோ வாரிய முன்னாள் தலைவர் சிந்து ரவிச்சந்திரன், அ.தி.மு.க. மாநகர பகுதி செயலாளர்கள் கே.சி.பழனிசாமி, மனோகரன், கேசவமூர்த்தி, முருகுசேகர், ஜெயராஜ், கோவிந்தராஜ், ஒன்றிய செயலாளர்கள் பூவேந்திரகுமார், கலைமணி, கதிர்வேல், கோபாலகிருஷ்ணன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் மணி என்கிற சின்னசாமி, இளைஞர் அணி செயலாளர் ஜெயபாலாஜி, சூரியம்பாளையம் பகுதி அவைத்தலைவர் தங்கமுத்து, இளைஞர் -இளம்பெண்கள் பாசறை செயலாளர் பி.பி.கே.மணிகண்டன், பெருந்துறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னுதுரை உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் முதல்-அமைச்சருக்கு கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. புறநகர் மாவட்டம் சார்பில் அமைச்சர் கே.சி.கருப்பணன் வீரவாள் பரிசு வழங்கினார்.
முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் முதல்-அமைச்சரின் புகைப்பட ஓவியம் வழங்கப்பட்டது. பள்ளிக்கூடம் சார்பில் பவானி கூடுதுறை புகைப்படம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிகளை நிர்மலா பெரியசாமி தொகுத்து வழங்கினார். அனைவரையும் ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் வரவேற்றார். முடிவில் மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா நன்றி கூறினார்.
இந்த விழா காரணமாக பவானி நகரம் நேற்று விழாக்கோலம் பூண்டு இருந்தது. லட்சுமிநகர் காவிரி பாலத்தில் இருந்தே அலங்கார வளைவுகள் கொடி தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் உருவப்படங்கள் கொண்ட பிரமாண்ட பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. காலிங்கராயன் வாய்க்கால் தூய்மைப்படுத்தப்பட்டு இருந்தது. பவானி ஆற்றையொட்டி சங்கமேஸ்வரர் கோவில் செல்லும் வழியில் மேடை அமைக்கப்பட்டு அ.தி.மு.க. கொள்கை விளக்க பாடல்கள் நடனங்கள் மூலமாக விளக்கப்பட்டது.
இதுபோல் பவானி முழுவதும் கொடிகள், தோரணங்கள், மேள-தாளம் என்று திருவிழா கோலம் பூண்டு இருந்தது. வழி நெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்து முதல்-அமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க. புறநகர் மாவட்ட செயலாளரும், சுற்றுச்சூழல்துறை அமைச்சருமான கே.சி.கருப்பணன் செய்து இருந்தார்.
பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கூட வளாகத்துக்கு முதல்-அமைச்சர் வந்ததும் பவானி சங்கமேஸ்வரர் ஆலயகுருக்கள் பூரண கும்பமரியாதை அளித்து கவுரவித்தனர்.
அதைத்தொடந்து பொதுமக்கள் வசதிக்காக இயக்கப்பட உள்ள நடமாடும் ஏ.டி.எம். எந்திரத்தை முதல்-அமைச்சர் பார்வையிட்டார். மேடைக்கு வந்ததும் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விழா நடந்த மைதானத்தில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு இருந்தன. ஆண்கள், பெண்களுக்கு, தனித்தனியாக தற்காலிக கழிப்பிடம் அமைக்கப்பட்டு இருந்தது. விழா மைதானம் முழுமையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பாரி, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சிவக்குமார் ஆகியோர் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாலாஜி சரவணன், சந்தனபாண்டியன் மற்றும் உயர் அதிகாரிகள் கொண்ட போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.
முன்னதாக பவானி அருகே உள்ள காலிங்கராயன்பாளையத்தில் காலிங்கராயன் மணிமண்டபம், காலிங்கராயன் உருவச்சிலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அவரை கலெக்டர் எஸ்.பிரபாகர், மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா, ஆர்.டி.ஓ. நர்மதாதேவி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதேபோல் காலிங்கராயன்பாளையம் கொங்கு வேளாளர் அமைப்பு சார்பில் மேளதாளங்கள் முழங்க பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், மணிமண்டபம் கட்டியதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story