ஈரோடு மாவட்டத்தில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை; பல இடங்களில் மரங்கள் முறிந்தது
ஈரோடு மாவட்டத்தில் சூறாவளிக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்தது. மின்கம்பங்கள் சாய்ந்ததால் கிராமங்கள் இருளில் மூழ்கின.
ஈரோடு,
சென்னிமலை அருகே உள்ளது பாலதொழுவு கொளத்துப்பாளையம். இந்த ஊர் வழியாக பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் இருந்து காளிபாளையம் வரை உயர் அழுத்த மின்சாரம் மின் கம்பங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. ஒரே கம்பத்தில் 3 லைன் செல்லும் வகையில் மின்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் சென்னிமலை பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது கொளத்துப்பாளையம் அருகே உள்ள 3 மின் கம்பங்கள் அங்குள்ள ரோட்டின் குறுக்கே விழுந்தது. இதில் 2 கம்பங்கள் முறிந்தும், ஒரு கம்பம் அடியோடும் சாய்ந்தும் கீழே விழுந்தது. மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததும் அந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டது.
இந்த நிலையில் கொளத்துப்பாளையத்தை அடுத்த பெரியகாட்டுபபாளையம் என்ற கிராமத்தில் விவசாயி இறந்த துக்கம் குறித்து விசாரிக்க பலர் வாகனங்களில் இரவில் அந்த ரோட்டின் வழியாக சென்று உள்ளனர். அப்போது மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் ரோட்டில் கிடந்த மின் கம்பிகள் அவர்களுக்கு தெரியவில்லை. இதில் ஒரு சிலர் வாகனங்களுடன் தவறி விழுந்தனர். நல்ல வேளையாக அந்த மின் கம்பியில் மின்சாரம் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் கொளத்துப்பாளையம், கரட்டுப்பாளையம் உள்பட அந்த பகுதியை சேர்ந்த 5 கிராமங்கள் இருளில் மூழ்கின.
அதுமட்டுமின்றி கொளத்துப்பாளையத்தில் உள்ள ரோட்டின் வழியாக சென்னிமலையில் இருந்து ஊத்துக்குளிக்கும், ஊத்துக்குளியில் இருந்து சென்னிமலைக்கும் இயக்கப்பட்ட டவுன் பஸ் நிறுத்தப்பட்டதுடன், கார், வேன் உள்பட எந்தவித வாகனங்களும் செல்லவில்லை. போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் அங்குள்ள பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதி வழியாக செல்லும் பல மின் கம்பங்களை ஆழமாக குழி தோண்டி நடாமல் மேலோட்டமாக நட்டு உள்ளனர். இதனால் தான் மின் கம்பங்கள் சாய்ந்து கீழே விழுந்துள்ளன. மின் கம்பங்கள் கீழே விழுந்தது பற்றி ஊத்துக்குளி மின் வாரிய அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தோம். ஆனால் மின்சார வாரிய ஊழியர்கள் யாரும் இங்கு மின் இணைப்பு கொடுக்கும் பணியில் ஈடுபடவில்லை. மின் வினியோகம் இல்லாதால் குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு மோட்டாரை இயக்க முடியாமல் சிரமப்படுவதுடன் செல்போனுக்கு ‘சார்ஜ்’ கூட போடமுடியவில்லை’ என்றனர்.
தாளவாடி பகுதியில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் தாளவாடி பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை 12.30 மணி வரை நீடித்தது.
இதன்காரணமாக தொட்டகாஜனூர், திகினாரை, மெட்டல்வாடி, சிக்கள்ளி, கோடிபுரம், தலமலை, ஆசனூர் உள்பட பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் அங்குள்ள ஓடைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
சூறாவளிக்காற்றால் தாளவாடியை அடுத்த பீம்ராஜ் நகர் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் தகரத்தினால் மேற்கூரை அமைக்கப்பட்டிருந்த குடிசை வீடு இடிந்து சேதம் அடைந்தது. அப்போது பழனிச்சாமியும், அவருடைய மனைவியும் மற்றொரு வீட்டில் உறங்கி கொண்டிருந்தால் உயிர்தப்பினர். அதுமட்டுமின்றி அந்த பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் வீட்டில் சிமெண்டு அட்டையினால் அமைக்கப்பட்டிருந்த மேற்கூரை தூக்கி வீசப்பட்டு சேதம் அடைந்தது.
மேலும் அதே பகுதியை சேர்ந்த தங்கமுத்து, சக்திவேல், நாகேந்திரன் ஆகியோரின் தோட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த 300-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து நாசம் ஆனது.
ஊஞ்சலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று முன்தினம் மாலை 6.30 மணி அளவில் பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. மழை மிதமாக பெய்தது. ஆனால் சுமார் 1 மணி நேரம் பலத்த சூறாவளிக்காற்று வீசியது. இதில் தாக்குப்பிடிக்க முடியாமல் ஊஞ்சலூர் ரெயில் நிலைய பிளாட்பார ஓரத்தில் இருந்த ஒரு மாமரம் முறிந்து ரெயில் தண்டவாளத்திலேயே விழுந்தது. உடனே ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் கிடந்த மரத்தை அப்புறப்படுத்தினார்கள். இதேபோல் ஆற்றங்கரை ஓரம் இருந்த பழமையான மரங்கள் சில முறிந்தன. ஊஞ்சலூர் அருகே உள்ள சொட்டையூர் கிராமத்தில் மதுரைவீரன்சாமி கோவில் அருகே இருந்த பெரிய அரச மரமும், அதன் அருகே இருந்த ஒரு மாமரமும் முறிந்து விழுந்தது. ஊஞ்சலூரை அடுத்த காசிபாளையத்தில் ரோட்டு ஓரம் இருந்த ஆலமரம் சூறாவளிக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் திருச்சி-ஈரோடு மெயின் ரோட்டிலேயே முறிந்து விழுந்தது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் 9 மணி வரை சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பர்கூர் மலைப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வனக்குட்டைகளில் நீர்மட்டம் உயர்ந்து உள்ளது.
தாமரைக்கரை என்ற கிராமத்தில் உள்ள தாமரைக்குளத்தின் நீர்மட்டமும் உயர்ந்து உள்ளது. இதன்காரணமாக பர்கூர் மலைப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story