கர்நாடக சட்டசபை தேர்தல்: ஹெப்பால், குஷ்டகியில் மறுவாக்குப்பதிவு அமைதியாக நடந்தது


கர்நாடக சட்டசபை தேர்தல்: ஹெப்பால், குஷ்டகியில் மறுவாக்குப்பதிவு அமைதியாக நடந்தது
x
தினத்தந்தி 14 May 2018 11:00 PM GMT (Updated: 2018-05-15T01:14:10+05:30)

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ஹெப்பால், குஷ்டகி தொகுதியில் மறுவாக்குப்பதிவு அமைதியாக நடந்தது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபைக்கு கடந்த 12-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 72.36 சதவீத வாக்குகள் பதிவாயின. பெங்களூரு ஹெப்பால் லொட்டேகொல்லஹள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அங்கு ஓட்டுப்பதிவு நிறுத்தப்பட்டது.

மேலும் கொப்பல் மாவட்டம் குஷ்டகி தொகுதியில் உள்ள மன்னெரலா கிராமத்தில், வாக்காளர் பட்டியலில் இருப்பதை விட கூடுதல் எண்ணிக்கையில் ஓட்டுகள் பதிவானதால், அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அந்த 2 மையங்களிலும் 14-ந் தேதி (நேற்று) மறுதேர்தல் நடை பெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அதன்படி ஹெப்பால் லொட்டேகொல்லஹள்ளியில் ஒரு வாக்குச்சாவடியிலும், குஷ்டகியில் மன்னெரலா கிராமத்தில் 2 வாக்குச்சாவடியிலும் நேற்று ஓட்டுப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. அந்த வாக்குச்சாவடிகளுக்கு உட்பட்ட வாக்காளர்கள் ஆர்வமாக வந்து வாக்களித்தனர். லொட்டேகொல்லஹள்ளியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தொண்டர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.

வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பூட்டி ‘சீல்‘ வைத்தனர். பின்னர் அதை ஓட்டு எண்ணிக்கை மையங்களுக்கு பாதுகாப்பாக எடுத்து வந்து வைத்தனர். லொட்டேகொல்லஹள்ளியில் நடந்த மறுவாக்குப்பதிவில், 53.32 சதவீதம் பேரும், மன்னெரலா கிராமத்தில் சுமார் 73 சதவீதம் பேரும் வாக்களித்தனர். இந்த தேர்தல் எந்த பிரச்சினையும் இன்றி அமைதியாக நடந்து முடிந்தது. இன்று(செவ்வாய்க்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.

Next Story