சட்டசபை தேர்தல் முடிவடைந்ததும் கர்நாடகத்தில் மின் கட்டணம் திடீர் உயர்வு


சட்டசபை தேர்தல் முடிவடைந்ததும் கர்நாடகத்தில் மின் கட்டணம் திடீர் உயர்வு
x
தினத்தந்தி 14 May 2018 11:15 PM GMT (Updated: 14 May 2018 7:50 PM GMT)

சட்டசபை தேர்தல் முடிவடைந்ததும் கர்நாடகத்தில் திடீரென மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

பெங்களூரு,

சட்டசபை தேர்தல் முடிவடைந்ததும் கர்நாடகத்தில் திடீரென மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. யூனிட்டுக்கு 20 முதல் 60 காசு வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 12-ந் தேதி நடந்து முடிந்தது. இந்த நிலையில் கர்நாடகத்தில் மின் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் சங்கரலிங்கேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் மின் கட்டணத்தை உயர்த்துமாறு மின் வினியோக நிறுவனங்கள் எங்களிடம் மனு கொடுத்தன. இதையடுத்து மின் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. பழைய கட்டணம் கடந்த மார்ச் 31-ந் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. இதுவரை அனைத்து மின் வினியோக நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியாக கட்டணம் உயர்த்தப்பட்டு வந்தது.

ஆனால் இந்த முறை ‘பெஸ்காம்‘ அதாவது பெங்களுருவில் மட்டும் சற்று அதிகமாக கட்டணம் உயர்த்தப்பட்டு மற்ற நிறுவனங்களுக்கு ஒரே மாதிரியாக கட்டணம் உயர்த்த அனுமதி கொடுத்துள்ளோம். பெங்களூரு மின் வினியோக நிறுவனம் (பெஸ்காம்) நிறுவனம் யூனிட்டுக்கு 82 காசு உயர்த்த அனுமதி கேட்டது. ஆனால் நாங்கள் அதில் 13 சதவீதம் வரை உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளோம்.

பெங்களூரு தவிர மற்ற மின் வினியோக நிறுவனங்கள் அதிகபட்சமாக 26 சதவீதம் வரை உயர்த்த அனுமதி வழங்கி இருக்கிறோம். அதாவது சராசரியாக வீட்டு உபயோக பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு யூனிட்டுக்கு 20 முதல் 25 காசு வரை உயர்த்தப்படுகிறது. தொழில் நிறுவனங்களுக்கு கட்டணம் 30 காசு வரை உயர்த்தப்படுகிறது.

மேலும் தொழில் நிறுவனங்கள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பயன்படுத்தும் மின்சாரத்திற்கு யூனிட்டுக்கு 2 ரூபாய் வரை கட்டண விலக்கு வழங்குகிறோம். குடிநீர் வினியோகம் செய்யும் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு யூனிட்டுக்கு 15 பைசா உயர்த்தப்படுகிறது. சராசரியாக மின் கட்டணம் யூனிட்டுக்கு 20 முதல் 60 காசு வரை உயர்த்தப்பட்டு உள்ளது.

மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கு யூனிட்டுக்கு ரூ.6 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. அதை தற்போது 5 ரூபாயாக குறைத்துள்ளோம். காரணம், மெட்ரோ ரெயில் போக்குவரத்தால், காற்று மாசு அடைவது குறைவதுடன் வாகன நெரிசலும் குறைகிறது. இதனால் இந்த கட்டண குறைப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது.

மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கத்தில், மின்சார சார்ஜர் மையங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டணம், யூனிட்டுக்கு 8 ரூபாயில் இருந்து ரூ.4.80 ஆக குறைக்கப்படுகிறது. விவசாய பம்புசெட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இதற்காக மாநில அரசு ரூ.8,040 கோடி வழங்கியுள்ளது. ஆனால் அந்த மானிய தொகை ரூ.11 ஆயிரத்து 40 கோடியாக உள்ளது.

மீதமுள்ள ரூ.3 ஆயிரம் கோடியை வழங்குமாறு மாநில அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. விவசாய பம்புசெட்டுகளுக்கு தற்போது 6 மணி நேரம் மின் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த மின்சாரம் இரவு நேரத்தில் வழங்கப்படுகிறது. இனி காலையில் 3 மணி நேரம் மற்றும் இரவில் 3 மணி நேரம் மின் வினியோகம் செய்யும்படி உத்தரவிட்டுள்ளோம். இந்த கட்டண உயர்வு கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதியில் இருந்து நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த மாத (மே) மின்ரசீதில், இந்த விலை உயர்வு சேர்த்து நுகர்வோர்களிடம் இருந்து வசூலிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story