கர்நாடகத்தில் ஆட்சியை கைப்பற்றுவது யார்? பகல் 12 மணிக்கு முடிவு தெரிந்து விடும்


கர்நாடகத்தில் ஆட்சியை கைப்பற்றுவது யார்? பகல் 12 மணிக்கு முடிவு தெரிந்து விடும்
x
தினத்தந்தி 15 May 2018 5:00 AM IST (Updated: 15 May 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் உள்ள 38 மையங்களில் இன்று (செவ்வாய்க் கிழமை) எண்ணப்படுகிறது.

பெங்களூரு,

கர்நாடக சட்ட சபைக்கு கடந்த 12-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் பெங்களூரு ஜெயநகர், ராஜராஜேஸ்வரிநகர் ஆகிய தொகுதிகள் தவிர 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில், 2,622 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். குறிப்பாக ஆளும் காங்கிரஸ் சார்பில் 220 தொகுதியிலும், பா.ஜனதா சார்பில் 222 தொகுதியிலும், ஜனதா தளம்(எஸ்)-பகுஜன் சமாஜ் கூட்டணி சார்பில் 217 தொகுதியிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.

இந்த மூன்று கட்சிகள் இடையே தான் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாயின. கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 71 சதவீத வாக்குகள் பதிவாயின. இந்த தேர்தலில் அதை தாண்டி 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருப்பது, கர்நாடக தேர்தல் வரலாற்றில் மிக அதிகமான ஓட்டுப்பதிவு சதவீதம் ஆகும்.

80 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களை கொண்ட பெங்களூருவில் சராசரியாக ஓட்டுப்பதிவு 50 சதவீதம் தான் பதிவாகி உள்ளது. படித்தவர்கள் அதிகம் வாழும் பகுதியில் ஓட்டுப்பதிவு குறைவாக பதிவாகி இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்கு எந்திரங்கள் மாநிலம் முழுவதும் 38 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. அந்த மையங்களில் ஓட்டு எண்ணிக்கை இன்று(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. சரியாக காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணும் பணி தொடங்குகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கப்படுகிறது. பெங்களூருவில் மட்டும் 5 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

அதாவது பெங்களூரு நகர மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை சேஷாத்திரி ரோட்டில் உள்ள மகாராணி கல்லூரியிலும், பெங்களூரு மத்திய பகுதியில் உள்ள தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை பசவனகுடி பி.வி.எஸ். கல்லூரியிலும், பெங்களூரு வடக்கு பகுதி தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை வசந்த்நகரில் உள்ள மவுண்ட் கார்மெல் கல்லூரியிலும், பெங்களூரு தெற்கு தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை ஜெயநகர் எஸ்.எஸ்.எம்.ஆர்.வி. கல்லூரியிலும், பெங்களூரு புறநகர் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை பசவேஸ்வரா சர்க்கிளில் உள்ள அரசு ராம் நாராயண் செல்லாராம் வணிக கல்லூரியிலும் நடைபெற உள்ளது. ஒரு தொகுதிக்கு ஒரு அரங்கு என்ற அளவில் மொத்தம் 26 அரங்குகளில் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வரிசை எண் அடிப்படையில் வாக்குச்சாவடி வாரியாக வாக்குகள் எண்ணப்படுகின்றன. மின்னணு வாக்கு பதிவு எந்திரங்களை வரிசையாக வைத்து, ஓட்டுகளை எண்ண வசதியாக மேஜைகள் மற்றும் நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குகள் எண்ணப்படும் அரங்கத்தில் தேர்தல் அதிகாரிகள், வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் வாக்கு எண்ணும் மையங்களை சுற்றிலும் 100 மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்கு எண்ணும் பணியில் 16 ஆயிரத்து 662 ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதில் 3,410 ஓட்டு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள், 3,410 ஓட்டு எண்ணிக்கை உதவியாளர்கள் அடங்குவர். 888 பேர் தபால் ஓட்டுகளை எண்ணும் பணியில் ஈடுபடுகிறார்கள்.

இதுவிர 5,544 பேர், பாதுகாப்பு அறையில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்து வந்து கொடுக்கும் பணியில் ஈடுபடுகிறார்கள். ஒவ்வொரு தொகுதி ஓட்டுகளை எண்ணும் பணிக்கு 88 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் 14 பேர் ஓட்டு எண்ணிக்கையை மேற்பார்வையிடும் பணியை செய்கிறார்கள். மேலும் 14 பேர் நுண்ணிய பார்வையாளர்களாக செயலாற்றுவார்கள். 222 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்துள்ளது. இதில் 217 தொகுதிகளில் பதிவான ஓட்டுகளை எண்ண 14 மேஜைகள் போடப்பட்டு உள்ளன.

மீதமுள்ள 5 தொகுதிகளுக்கு 14-க்கும் அதிகமான மேஜைகள் போடப்பட்டு இருக்கின்றன. இந்த 5 தொகுதிகளில் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கூடுதல் மேஜைகள் போடப்பட்டுள்ளன. இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி இந்த ஓட்டு எண்ணிக்கை பணி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.கர்நாடகத்தில் ஆட்சியை கைப்பற்றுவது யார்? என்பது பகல் 12 மணிக்கு தெரிந்துவிடும்.

தேர்தல் முடிவுகளை அறிய வேட்பாளர்கள், கட்சியினர் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாடே மிகுந்த ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கிறது. ஏனென்றால் இந்த தேர்தல் முடிவு தான் அடுத்த ஆண்டு(2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்று அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கருதுகிறார்கள். இந்த தேர்தலில் பா.ஜனதா வென்றால், அது பிரதமர் மோடியின் கரங்களை மேலும் பலப்படுத்துவதாக இருக் கும்.

ஒருவேளை காங்கிரஸ் வெற்றி பெற்றால், கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் மற்றும் இதர எதிர்க்கட்சிகளின் தொண்டர்களுக்கு உற்சாகம் அளிப்பதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. அதனால் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவை நாடே எதிர்பார்த்து காத்திருக்கிறது. அதற்கான விடை இன்று கிடைத்து விடும்.

Next Story